தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று சட்டமன்ற தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு 
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று சட்டமன்ற தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு | TN Elections | ECI |

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் மே 4 அன்று வெளியாகும் என்று அறிவிப்பு...

கிழக்கு நியூஸ்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெற்று மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றங்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. அதன்படி, அஸ்ஸாம் மாநிலத்தின் சட்டமன்றம் மே 20 அன்றும், கேரளத்தில் மே 23 அன்றும், தமிழ்நாட்டில் ஜூன் 15 அன்றும், புதுச்சேரியில் மே 10 அன்றும், மேற்கு வங்கத்தில் மே 7 அன்றும் முடிவடைகின்றன. இதையடுத்து ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

சிறப்பு தீவிர திருத்தம்

முன்னதாக இந்த ஐந்து மாநிலங்கள் உட்பட அந்தமான் நிக்கோபார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் 27 அன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நவம்பர் மாதம் தொடங்கிய சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பிப்ரவரி 23 அன்று நிறைவடைந்தது. அதன்பின் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் மொத்தம்5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிப்பு

இதற்கிடையில் இன்று தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் தேதிகளை அறிவித்தார். அதன்படி அஸ்ஸாம், கேரளம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் எப்போது?

234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 அன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல் மேற்கு வங்கத்தைப் பொறுத்தளவில் இரண்டு கட்டமாக முதல் 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 அன்றும், அடுத்த 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29 அன்றும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் ஒரே கட்டமாக மே 4 அன்று எண்ணப்பட்டு, அன்று முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

மார்ச் 30 வேட்பு மனு தாக்கல்

தமிழ்நாட்டில்,

  • வேட்பு மனு தாக்கல் - மார்ச் 30

  • வேட்பு மனு தாக்கல் நிறைவு - ஏப்ரல் 6

  • வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை - ஏப்ரல் 7

  • வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுதல் - ஏப்ரல் 9

  • வாக்குப்பதிவு - ஏப்ரல் 23

  • வாக்கு எண்ணிக்கை - மே 4

புதிய அறிவிப்புகள் வெளியிட முடியாது

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இவற்றில் மொத்தம் 2,18,805 வாக்குச்சாவடிகள். குறிப்பாக தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் உள்ளன.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் அரசு சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Chief Election Commissioner Gyanesh Kumar announced that voting for the Tamil Nadu Legislative Assembly elections will take place on April 23, and the counting of votes will be held on May 4.