ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று எனவும், இதை அனுமதிக்கக் கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேயில் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் பெண் வீட்டாரால் இரு நாள்களுக்கு முன்பு சூறையாடப்பட்டது.
இதுதொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த கே. பாலகிருஷ்ணன் கூறியதாவது:
"சாதி வெறி படுகொலை அடிக்கடி நடப்பது தொடர்கதையாகியுள்ளது. சாதி மறுப்புத் திருமணத்தைத் தடுப்பது, அதைக் கட்டுப்படுத்துவது, அப்படிப்பட்ட தம்பதிகளை அழைத்துச் சென்று கொலை செய்வது தமிழ்நாட்டில் சாதாரணமாகியுள்ளது.
ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இது தமிழ்நாட்டுக்கு அவப்பெயர். இதுபோன்ற நிலையை அனுமதிப்பது தமிழ்நாட்டுக்கு அழகல்ல. எத்தனையோ சாதி மறுப்புத் தலைவர்கள் பிறந்திருக்கும் இந்த மண்ணில், இன்றும் சாதியின் பெயரால் படுகொலை நடப்பதையும், சாதியின் பெயரால் கொடுமைகள் நடப்பதையும் அனுமதிக்க முடியாது.
இந்தச் சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அரசும் ஒரு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
நாங்கள் யாரையும் கடத்திச் சென்று திருமணம் நடத்தி வைக்கவில்லை. எங்களை நாடி வருபவர்களுக்கு நாங்கள் பாதுகாப்பு அளிக்கிறோம். எங்களை நாடி வரும் பாதுகாப்பற்ற காதல் தம்பதிகளுக்கு, சாதி மறுப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு என்றும் பாதுகாப்பு கேடயமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திகழும்.
அரசு இப்படிப்பட்ட தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு வீடு கொடுக்க வேண்டும். அவர்களுடைய வருமானத்துக்கு உத்தரவாதம் கொடுப்பதையும் அரசு செய்ய வேண்டும். அரசு செய்யாதபட்சத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடைசி வரை ஏற்றுக்கொள்ளும்" என்றார் பாலகிருஷ்ணன்.