கோப்புப்படம் 
தமிழ்நாடு

கிண்டி ரேஸ் கோர்ஸ் குத்தகை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

ரேஸ் கோர்ஸ் மைதானம் பொதுப்பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும், அங்குள்ள அசையும் சொத்துக்களை அகற்றுவது தொடர்பாக 14 நாட்களுக்குள் முறையிடலாம் எனவும் தகவல்

ராம் அப்பண்ணசாமி

சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸுக்கான குத்தகையை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

பல வருடங்களாக கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய குத்தகைத் தொகையான ரூ. 730 கோடியைச் செலுத்தாதால், இன்று (செப்.09) காலை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்துக்கு தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் சார்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக அரசு அதிகாரிகள் எங்களுக்கு முறையான கால அவகாசம் கொடுக்காமல் மைதானம் அமைந்துள்ள இடத்துக்குச் சீல் வைத்துவிட்டனர் என்று கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்துக்குத் தகுந்த கால அவகாசம் கொடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழக அரசுக்கும், கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்துக்குமான குத்தகையை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ரேஸ் கோர்ஸ் மைதானம் பொதுப்பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணையின் மூலம், தமிழக அரசுக்குச் சொந்தமான கிண்டி ரேஸ் கோர்ஸ் அமைத்துள்ள இடத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் கையகப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ரேஸ் கோர்ஸில் உள்ள அசையும் சொத்துக்களை அகற்றுவது தொடர்பாக 14 நாட்களுக்குள் முறையிடலாம் எனவும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளது தமிழக அரசு.

கிண்டியில் உள்ள 160 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்திக்கொள்ள 1946-ல் அன்றைய மெட்ராஸ் மாகாண அரசுடன் கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் மேற்கொண்ட 99 வருட நில ஒப்பந்தம் 2045-ல் நிறைவடைய உள்ளது. ஆனால் குத்தகையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் குத்தகைத் தொகையை அரசுக்குச் செலுத்தாமல் நிலுவையில் வைத்ததால் தமிழக அரசு குத்தகையை ரத்து செய்துள்ளது.