சென்னை மெட்ரோ - கோப்புப்படம் 
தமிழ்நாடு

கோயம்பேடு – பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டம்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு! | Chennai Metro | Koyambedu Pattabiram

கோயம்பேட்டில் தொடங்கி பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம் (வெளிவட்டச் சாலை) வரை 19 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையவுள்ளன.

ராம் அப்பண்ணசாமி

சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்பில் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையில் புதிய மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது.

கோயம்பேடு தொடங்கி பட்டாபிராம் வரை புதிய மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறையிடம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கடந்த பிப்ரவரி 21 அன்று சமர்ப்பித்தது.

சென்னை கோயம்பேட்டில் தொடங்கி பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாகச் சென்று பட்டாபிராம் (வெளிவட்டச் சாலை) வரை 19 புதிய மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமையவிருக்கும் இந்த புதிய வழித்தடத்திற்கு ரூ. 9,744 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழித்தடத்தின் மொத்த நீளம் 21.76 கி.மீ. ஆக இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் ஓடி, ஆவடி இரயில் நிலையம், ஆவடி பேருந்து முனையம், சென்னை வெளிவட்டச் சாலை போன்ற போக்குவரத்து மையங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும் வகையில் இந்த புதிய வழித்தடத்திற்கான திட்டம் தயார் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த மே 2 அன்று இந்த புதிய வழித்தட திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில், கோயம்பேடு – பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 2,442 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக இன்று (ஆக. 19) செய்தி வெளியாகியுள்ளது. மேலும், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்க மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.