தமிழ்நாடு

அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

அரசு மருத்துவர்கள் சங்கத்திடம் தமிழ்நாடு அரசு இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

கிழக்கு நியூஸ்

சென்னையில் அரசு மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அரசு மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர் பாலாஜி மீது நோயாளியின் மகன் ஒருவர் கத்தியால் 7 இடங்களில் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்த அரசு மருத்துவருக்கு அறுவைச் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

"போராட்டம் காரணமாக அனைத்து மருத்துவப் பணிகளும் உடனடியாக நிறுத்தப்படும். இதைத் தொடர்ந்து, மாணவர்களின் வகுப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, அவர்களையும் போராட்டத்தில் பங்கெடுக்க அழைப்பு விடுத்துள்ளோம். மூன்றாவது கட்டமாக, தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் போராட்டத்தில் பங்கெடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்று மாலை நடைபெறும் பேச்சுவார்த்தையில் இதுகுறித்து முடிவு செய்யவுள்ளோம்.

உயிர் காக்கும் சிகிச்சைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் அதிகப்படியான ஆள்களை நியமித்து கவனிப்போம். மற்ற பணிகள் அனைத்தையும் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

அரசு மருத்துவமனைகளுக்குக் கிட்டத்தட்ட ஒருநாளைக்கு 5 லட்சம் பேர் வருகிறார்கள். உள்நோயாளிகளுக்கு 60 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன. இந்த நிலையில் பாதுகாப்பு என்பது மிகவும் தொய்வாக உள்ளது.

பெரிய அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 4 காவல் அதிகாரிகள் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களும் மருத்துவ ரீதியாகத் தகுதியற்றவர்களாகவே உள்ளார்கள். இவர்களும் இதுமாதிரியான சம்பவங்களைத் தடுக்க முற்படுவதில்லை. ரோந்துப் பணிகளிலும் ஈடுபடுவதில்லை. நாங்கள் மிகவும் பாதுகாப்பற்றத் தன்மையில்தான் வேலை பார்த்து வருகிறோம். இனி வரும் காலங்களில் இதைச் சரி செய்ய வேண்டும் என்பதற்காகப் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் சுகாதாரத் துறை அமைச்சர், முதல்வர் மற்றும் அரசிடம்தான் வைத்துள்ளோம். இதுதொடர்பாக பல முறை பேசியிருந்தாலும், இந்த முறை வேறுவழியின்றி நிர்பந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். அடுத்து ஓரிரு நாள்களில் உறுதியான முடிவுகள் மற்றும் தீர்வுகளைக் கொடுத்தால் மட்டுமே நாங்கள் சேவையைத் தொடர்வோம் என்கிற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" என்றார் அவர்.

அரசு மருத்துவர்கள் சங்கத்திடம் தமிழ்நாடு அரசு இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

முன்னதாக, இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டார்.