தமிழ்நாடு

ஹிந்திக்கு எதிராக மசோதா?: தமிழ்நாடு அரசு மறுப்பு! | Tamil Nadu Assembly |

"அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை."

கிழக்கு நியூஸ்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஹிந்தி மொழிக்குத் தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக வெளியான தகவலுக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 14 முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் புதன்கிழமை மிக முக்கியமான மசோதா தாக்கல் செயய்ப்படவுள்ளதாகவும் இதுதொடர்பாக செவ்வாயன்று இரவு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து, ஹிந்தி மொழிக்கு எதிரான மசோதா ஒன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக ஆங்கில ஊடகங்களில் தகவல் வெளியானது. தமிழ்நாட்டில் ஹிந்திப் படங்கள், ஹிந்திப் பாடல்கள், ஹிந்தி மொழியில் வெளியாகும் அச்சு விளம்பரங்கள், ஹிந்தி மொழி இடம்பெற்றுள்ள விளம்பரப் பலகைகள் உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கும் வகையில் அந்த மசோதா அமையவுள்ளதாகத் தகவல்கள் கசிந்தன. பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இதுபற்றி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தத் தகவல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. இப்படியாக எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என சட்டப்பேரவைச் செயலர் விளக்கமளித்துள்ளதாக தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தகவல் சரிபார்ப்பகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஹிந்தி மொழிக்குத் தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக பரவும் வதந்தி!

தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஹிந்தி மொழிக்குத் தடை விதிக்கும் மசோதாவை முதல்வர் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகளில் வெளியாகி வருகிறது. இது முற்றிலும் வதந்தியே. "அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை" என்று சட்டப்பேரவைச் செயலர் தெரிவித்துள்ளார்.

வதந்தியைப் பரப்பாதீர்!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Assembly | Hindi | Anti Hindi | Hindi Imposition | TN Fact Check | Fact Check |