தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு | MK Stalin |

மத்திய அரசைப் போலவே அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு 58% ஆக வழங்கப்படும்...

கிழக்கு நியூஸ்

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாட்டில், விலைவாசி உயர்வைக் கையாளும் விதமாக ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை என இருமுறை அகவிலைப்படி திருத்தத்தைச் செய்து வருகிறது. அதனடிப்படையில் கடந்த அக்டோபர் 1 அன்று, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 58% ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து மத்திய அரசைப் போலவே தமிழ்நாட்டிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 55% ஆக உள்ள அகவிலைப்படி, 3% உயர்த்தப்பட்டு 58% ஆக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“தமிழ்நாட்டு மக்கள் நலனில் அன்பும் அக்கறையும் கொண்டு பல சீரிய முன்னோடி நலத் திட்டங்களைத் தீட்டி தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது.

மக்களுக்காக வகுக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டுவதிலும், அத்திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் களப்பணியாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்.

அத்தகைய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இவ்வரசு கருத்தில் கொண்டு, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை 1 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படிக்கு இணையாக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

இதனால் தற்போது 55% ஆக உள்ள அகவிலைப்படி, 3% உயர்த்தப்பட்டு ஜூலை 1 முதல் 58% ஆக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

இதனால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ. 1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Chief Minister M.K. Stalin has announced that the Dearness Allowance for government employees and teachers will be increased by 3%.