வயநாடு நிலச்சரிவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 5 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 45-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்றும் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள மீட்புக் குழுவுக்கு உதவும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து சிறப்புக் குழு கேரளம் விரைகிறது. மேலும், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
"நேற்று முதல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச் சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை முதல்வர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.
இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட தமிழ்நாடு முதல்வர், தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான டாக்டர் கீ.சு. சமீரன் ஐஏஎஸ் மற்றும் ஜான் டாம் வர்கீஸ் ஐஏஎஸ் ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கிடவும், முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்படவுள்ள மீட்புக் குழுவில் தீயணைப்புத் துறையிலிருந்து 20 தீயணைப்பு வீரர்கள் ஒரு இணை இயக்குநர் தலைமையிலும், 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவினரும் கேரள அரசுடன் மீட்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பணிகளில் இணைந்துப் பணியாற்றுவார்கள். இந்தக் குழுவானது இன்றே கேரளத்துக்குப் புறப்பட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.