கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

"இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களையும் 199 மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிக்கவும்.."

கிழக்கு நியூஸ்

தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கைக் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாவது:

"ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (அக்டோபர் 23) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதுடன, அவை கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக உள்ளது.

இதுபோன்று நம் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களையும் 199 மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.