கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் `உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 15) தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் நகருக்கு நேற்று (ஜூலை 14) வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் காமராஜ் பிறந்தநாளை ஒட்டி இன்று (ஜூலை 15) காலை 9 மணி அளவில் சிதம்பரம் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் வைக்கப்பட்டிருந்த காமராஜின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள வாண்டையார் திருமண மண்டபத்திற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், `உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய அரசுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகளை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் `உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜூலை 15) தொடங்கி நவம்பர் 30-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. நகர்புற பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக முகாம்கள் நடைபெறும் இடம், தேதி ஆகியவற்றை அறிந்துகொள்ள: cmhelpline.tnega.org