தமிழ்நாடு

அஜித்குமார் குடும்பத்தினரிடம் வருத்தம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் (காணொளி)

அஜித்குமார் சகோதரரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்ட கேள்வி...

கிழக்கு நியூஸ்

காவல் துறை மரண வழக்கில் உயிரிழந்த அஜித்குமார் என்ற இளைஞரின் குடும்பத்தினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த 28.06.25 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பது தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். மானாமதுரை துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று மாலை அஜித்குமார் இல்லத்துக்குச் சென்று அவருடைய குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரரிடம் பேசி ஆறுதல் கூறினார்.

அஜித்குமார் குடும்பத்தினரிடம் பேசியதை, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் காணொளியாக வெளியிட்டுள்ளார்.