தமிழ்நாடு

கோவை அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு | GD Naidu Bridge | Avinashi Road Flyover |

ஜி.டி. நாயுடு மேம்பாலம் என்ற பெயரில் சாதிப் பெயர் இடம்பெற்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அமைச்சர் எ.வ. வேலு விளக்கியுள்ளார்.

கிழக்கு நியூஸ்

கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரையிலான தமிழ்நாட்டின் மிக நீளமான 10.1 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

ஜி.டி. நாயுடுவின் பெயர் இந்த மேம்பாலத்துக்குச் சூட்டப்பட்டுள்ள நிலையில், ஜி.டி. நாயுடுவின் மகன் மற்றும் குடும்பத்தார் மேம்பாலத் திறப்பு விழாவில் கலந்துகொண்டார்கள்.

கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. விமான நிலையம் செல்லக்கூடிய இந்தச் சாலையில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. கோவையிலிருந்து வெளியூர் செல்லவும் அவிநாசி சாலையையே பயன்படுத்த வேண்டியுள்ளது.

இந்தப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 5 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றதாக திமுக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ரூ. 1,791 கோடியில் 10.1 கி.மீ. நீளம் கொண்ட பாலத்தின் மீதமுள்ள 95 சதவீதப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு ஜி.டி. நாயுடு மேம்பாலம் எனப் பெயர் சூட்டவுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி, பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக கோவை சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜி.டி. நாயுடு மேம்பாலம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை இன்று காலை திறந்து வைத்தார். ஜி.டி. நாயுடுவின் மகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மேம்பாலத் திறப்பு விழாவில் கலந்துகொண்டார்கள்.

முன்னதாக, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ. வேலுவிடம், ஜி.டி. நாயுடு மேம்பாலம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதில் சாதிப் பெயர் இடம்பெற்றிருப்பதாகக் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் எ.வ. வேலு, "பொதுவாக அவரைக் (ஜி.டி. நாயுடு) குறிப்பிடும்போது எல்லோரும் அப்படிதான் குறிப்பிடுகிறார்கள். அந்த அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, என்ன செய்யலாம் என்று ஜி.டி. நாயுடுவின் குடும்பத்தினருடன் கலந்துபேசி, முதல்வர் முடிவு செய்வார்" என்றார் எ.வ. வேலு.

MK Stalin | GD Naidu Bridge | Avinashi Road Bridge | Avinashi Road Flyover | GD Naidu Flyover | Coimbatore Flyover | Tamil Nadu's longest Flyover |