சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் பட்டா வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.10) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டிற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது,
`சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் `பெல்ட் ஏரியா’ எனக் கூறப்படும் 32 கி.மீ. பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்கள் நீண்ட காலமாக பட்டா பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த பெல்ட் ஏரியா சட்டம் 1962-ல் அமலுக்கு வந்தது. 1962-ல் இருந்து 2025 வரை அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவர்களுக்கு 6 மாதத்துக்குள் பட்டா வழங்க உத்தரவிட்டதுடன், மாவட்ட அளவில் ஒரு குழுவும், மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து உடனடியாக அந்தப் பணிகளை துவங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளில் இதே போல பிரச்னை இருக்கிறது.
குறிப்பாக மாநகராட்சி, நகராட்சி, மாவட்டத் தலைநகரில் இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க முதல்வர் அறிவறுத்தியுள்ளார். ஏறத்தாழ 86 ஆயிரம் பேருக்கு 6 மாதங்களுக்குள் பட்டாவை வழங்கும்படி கூறியுள்ளார்’ என்றார்.
இந்நிலையில், இது தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் வெளியிட்ட பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது,
`ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகால பிரச்னைக்குத் தீர்வு. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் `பெல்ட் ஏரியாக்களில்’ ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர் மற்றும் மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் வசிக்கும் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
6 மாதங்களில் இதனைச் செய்து முடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவிருக்கிறோம். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்றார்.