ANI
தமிழ்நாடு

நாளை (ஜன.6) கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

வேங்கைவயல் சம்பவம் குறித்து விவாதிக்கும் வகையில் விசிக எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்துள்ளார்.

ராம் அப்பண்ணசாமி

தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் நாளை (ஜன.6) தொடங்குகிறது.

நடப்பாண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை (ஜன.6) காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி.

சட்டப்பேரவையில் உரையாற்ற வருமாறு, கடந்த ஜன.3-ல் சபாநாயகர் மு. அப்பாவுவும், சட்டப்பேரவை செயலர் கி. சீனிவாசனும் ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தனர்.

கடந்த ஆண்டில் நடைபெற்ற முதல் கூட்டத்தொடரின்போது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் இடம்பெற்றிருந்த சில வாக்கியங்களை விடுத்தும், இடம்பெறாத புதிய வாக்கியங்களை சேர்த்தும் ஆர்.என். ரவி வாசித்தது சர்ச்சையானது. இந்நிலையில், நடப்பாண்டிற்கான உரைக்கு, ஆளுநர் ஆர்.என். ரவியிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தி முடித்ததும், உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் வாசிப்பது மரபாகும். அத்தோடு சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவுபெறும். அதைத் தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி, ஆளுநர் உரை மீது எத்தனை நாட்கள் விவாதம் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும்.

28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் (ஜன.5) முடிவுக்கு வருவதால், தேர்தல் நடத்தும் வரை அந்த அமைப்புகளுக்கான தனி அலுவலர்களை நியமிக்கும் வகையில், இந்தக் கூட்டத்தொடரில் அவசர சட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தக் கூட்டத்தொடரில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வேங்கைவயல் சம்பவம் குறித்து விவாதிக்கும் வகையில் விசிக எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்துள்ளார்.