சென்னை வந்தடைந்த மீனவர்கள் 
தமிழ்நாடு

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 19 மீனவர்கள் சென்னை வருகை

இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 தமிழ்நாட்டு மீனவர்கள், இன்று காலை சென்னை வந்தடைந்தார்கள்.

எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் வழக்கமாக உள்ளது. கடந்த ஜனவரி 23-ல் கைது செய்யப்பட்ட 19 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலை கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்கள். இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் இந்தத் தகவலை காலை உறுதி செய்தது.

சென்னை விமான நிலையம் வந்த 19 மீனவர்களில் 9 பேர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்கள். 4 பேர் புதுக்கோட்டையையும், 6 பேர் காரைக்காலையும் சேர்ந்தவர்கள்.

முன்னதாக, மீனவர்களின் தொடர் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து மீனவர்கள் கடந்த பிப்ரவரி 5-ல் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தப் பிரச்னையைத் தீர்க்கக் கோரி மீனவர்கள் கோரிக்கை வைத்தார்கள். தங்களுடைய கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் வாக்காளர் அடையாள அட்டையைத் திருப்பிக் கொடுத்து, தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்தார்கள்.

இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.