தமிழ்நாடு

சிறந்த நூல்களுக்கான விருதுகளை வழங்கிய அமைச்சர் சாமிநாதன்

சிறந்த நூல்களுக்கான விருதுகளைப் பெற்ற நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்துக்குப் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை...

கிழக்கு நியூஸ்

சிறந்த நூல்களுக்கான விருதுகளைப் பெற்ற நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்துக்குப் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இன்று வழங்கினார்

தமிழில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் வகையில் 33 பிரிவுகளில் சிறந்த படைப்புகளை அளித்த நூலாசிரியர்களுக்கும் அந்நூல்களைப் பதிப்பித்த பதிப்பகத்தாரர்களுக்கும் ஆண்டுதோறும் காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் 1971-ம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. பேராசிரியர்கள், தமிழறிஞர்களைக் கொண்டு மதிப்பீடு செய்து ஒவ்வொரு பிரிவிலும் நூலைத் தேர்வு செய்து அந்நூலை எழுதிய நூலாசிரியருக்கு ரூ. 30,000 பரிசுத் தொகையுடன் சான்றிதழும், அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ. 10,000 பரிசுத் தொகையுடன் சான்றிதழும் தமிழ் வளர்ச்சித் துறை மூலமாக வழங்கப்படுகின்றன.

நேற்று, சிறந்த நூல்களுக்கான பட்டியலைத் தமிழக அரசு அறிவித்தது. கிழக்கு பதிப்பக்கம் வெளியிட்ட இரு நூல்களுக்கு அரசின் விருதுகள் கிடைத்துள்ளன. எழுத்தாளர் ஹரிஹரசுதன் தங்கவேலுவின் 'இஸ்ரோவின் கதை' எனும் நூல், பொறியியல், தொழில்நுட்பவியல் பிரிவில் 2021-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாகவும் 'பொருளியல் வணிகவியல், மேலாண்மையியல்' பிரிவில் 2020-ம் ஆண்டுக்கான சிறந்த நூலாக எழுத்தாளர் சோம. வள்ளியப்பன் எழுதிய 'மியூச்சுவல் ஃபண்ட்' நூலும் தேர்வாகியுள்ளன.

சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் சிறந்த நூல்களை எழுதிய எழுத்தாளர்கள், நூல்களை வெளியிட்ட பதிப்பகங்களுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் இல. சுப்பிர மணியன் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.