வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் ஜனவரி 7-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்துப் போக்குவரத்துத் தொழிற்சங்கங்களும் ஜனவரி 9 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச செலவை அரசு கொடுக்க வேண்டும், ஓய்வூதியர்களின் பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்தங்கள் வரும்போது ஓய்வூதியர்களுக்கு ஊதிய விகித ஒப்பந்தப் பலனைக் கொடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில், விண்ணப்பித்து காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும், 2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்துள்ளவர்களுக்குப் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசிடம் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
தமிழக அரசிடம் இரு முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படாததையடுத்து, ஜனவரி 9 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகப் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"நிதி கூடுதலாக செலவாகின்ற விஷயங்களை நிதித் துறையுடன் கலந்தாலோசித்து, அவர்களிடம் அதுகுறித்து விவாதித்த பிறகே அறிவிக்க முடியும் என்பதால் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, போராட்டத்தைக் கைவிடுவது தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்படுகிறது.
அனைவருக்கும் கோரிக்கைகள் இருக்கும். அதை ஒரேநாளில் நிறைவேற்றிட முடியாது. கோரிக்கைகள் குறித்து பேசிய பிறகுதான் முடிவெடுக்க முடியும். நிதித் துறை பேசிய பிறகே முடிவெடுக்கப்படும்" என்றார் அமைச்சர் சிவசங்கர்.
அமைச்சருடனான பேச்சுவார்த்தை குறித்து சிஐடியூ பொதுச்செயலாளர் சௌந்தரராஜன் கூறியதாவது:
"பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமைச்சருக்கு நன்றி. பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வருவதைத் தான் தொழிற்சங்கங்களும் விரும்புகின்றன. இந்தப் பேச்சுவார்த்தையில் அமைச்சரிடம் 6 கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தோம். எந்தக் கோரிக்கை மீது உடனடியாக முடிவெடுக்க முடியும் என்பது தொடர்பாகக் கேட்டறிந்தோம். அடுத்த பேச்சுவார்த்தைக்கானத் தேதியை அறிவியுங்கள் எனக் கேட்டோம். பணியிலுள்ள ஊழியர்களுக்கு நான்கு மாதங்கள் அகவிலைப்படி நிலுவையில் உள்ளது. பொங்கலுக்கு முன்பே இதை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் அகவிலைப்படி என்பது முடிவுக்கு வர வேண்டும். நிலுவையில் இருப்பதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். நடைமுறையில் வருவதை இந்த மாதத்திலிருந்து அமல்படுத்த வேண்டும்.
இதற்கு நிதித் துறை என்றெல்லாம் அவர் பதில் கூறினார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் காரணம் கூறுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றோம். ஒருநாள் அவகாசம் கொடுங்கள் எனக் கேட்டார். நாளை மறுநாள் வரை அமைச்சரின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.
அதுவரை வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பு தொடரும். வேலைநிறுத்தத்துக்கான எங்களது பிரசாரம் தொடரும். அரசு இதை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என்றார் அவர்.