கோப்புப்படம் படம்: https://x.com/ilaiyaraaja
தமிழ்நாடு

சிம்பொனி அரங்கேற்றம் இந்நாட்டின் பெருமை: இளையராஜா

மகத்தான இந்தியா என்பதுபோல மகத்தான இளையராஜா அவ்வளவுதான். இனிமேல் இதுபோல யாரும் வரப்போவதில்லை, இதற்கு முன்பு வந்ததுமில்லை....

கிழக்கு நியூஸ்

சிம்பொனி அரங்கேற்றத்துக்காக லண்டன் புறப்பட்ட இளையராஜா, இது தன்னுடையப் பெருமை அல்ல நாட்டின் பெருமை என்று கூறினார்.

இசைஞானி இளையராஜா தனது முதல் மேற்கத்திய கிளாசிகல் சிம்பொனியை மார்ச் 8 அன்று லண்டனிலுள்ள அப்போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்கிறார். இதற்காக வியாழக்கிழமை காலை சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார் இளையராஜா.

புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"புதிய சிம்பொனியை வெளியிடுவதற்காக லண்டன் புறப்படுகிறேன். அங்கு உலகிலேயே தலைசிறந்த இசைக்குழுவான ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா லண்டன்... அவர்கள் வாசித்து, ரசிகர்கள் எல்லாம் கேட்டு மகிழும் வகையில் மார்ச் 8 அன்று இந்த இசையை வெளியிடுகிறோம். மார்ச் 8 அன்று அப்போலோ அரங்கில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இது ரசிகர்களுக்கு மிகப் பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம்கூட சந்தேகமில்லை.

இந்த இசை நிகழ்ச்சியை அரங்கேற்றுவதில் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கிறது? உங்களுக்கு அப்படி இருக்கும்போது எனக்கு எப்படி இருக்கும்... அனைவரும் இங்கு நல்ல மனதுடன் வந்துள்ளோம். அனைவரும் வாழ்த்தி நல்லபடியாக இந்த இசை நிகழ்ச்சியை நடத்த இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள். இது என்னுடையப் பெருமை இல்லை, இது நாட்டின் பெருமை, இந்தியாவின் பெருமை. மகத்தான இந்தியா என்பதுபோல மகத்தான இளையராஜா அவ்வளவுதான். இனிமேல் இதுபோல யாரும் வரப்போவதில்லை. இதற்கு முன்பு வந்ததுமில்லை.

நீங்கள் அனைவரும் சேர்ந்ததுதான் நான். உங்களுடையப் பெருமையைதான் நான் அங்கே சென்று அரங்கேற்றப்போகிறேன். எல்லோருக்கும் வாழ்த்துகள், இறைவனின் அருள் எல்லோருக்கும் பரிபூரணமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்" என்றார் இளையராஜா.