மேல்முறையீட்டு வழக்கு நிறைவடையும் வரை ஹெச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கடந்த 2018 மார்ச்சில் தனது சமூக வலைதளக் கணக்கில் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதுபோல தமிழகத்திலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து 2018 ஏப்ரலில் திமுக எம்.பி. கனிமொழி குறித்துத் தன் சமூக வலைதளக்கில் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டிருந்தார்.
அதையடுத்து ஹெச். ராஜாவுக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்குகள் தொடர்பான விசாரணையை 3 மாதங்களில் முடிக்குமாறு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இந்த வழக்குகளின் விசாரணை, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் ஹெச். ராஜாவுக்கு 2 வழக்குகளிலும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு ஹெச். ராஜா வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை அடுத்து, சிறை தண்டனையை ஒரு மாத காலம் நிறுத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி ஜெயவேல்.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஹெச். ராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று (டிச.27) விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கெளரி, மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை, ஹெச். ராஜாவின் தண்டனையை நிறுத்திவைப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.