தமிழ்நாடு

நடிகை வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான் | Seeman |

இரு தரப்பிலும் மன்னிப்பு கேட்கப்பட்டதை அடுத்து வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்...

கிழக்கு நியூஸ்

சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கில் இரு தரப்பிலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கப்பட்டதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

நடிகையைக் கடந்த 2011-ல் திருமணம் செய்வதாகக் கூறி சீமான் ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அப்போது, வரும் செப்டம்பர் 24-க்குள் நடிகையிடம் சீமான் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு ரத்து செய்யப்படும். தவறினால் சீமானைக் கைது செய்ய தற்போது இருக்கும் தடை நீக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் மகாதேவன் ஆகியோர் அமர்வில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நடிகை மீதான குற்றச்சாட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், இனி நடிகையைத் தொடர்பு கொள்ள மாட்டோம் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதேபோல் நடிகை தரப்பிலும் சீமான் மீதான குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற்று, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்விரு பிரமாணப் பத்திரங்களையும் ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ”இரு தரப்பினரும் தங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு அமைதி காணும் வகையிலும், அனைத்து வழக்குகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கிலும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளன. இரு தரப்பினரும் எந்த வழக்கையும் தொடர விரும்பவில்லை. மேலும் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களின் முன்பும், மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எதிரான எந்த அறிக்கையையும் வெளியிடப்படாது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இரு தரப்பின் நிபந்தனையற்ற மன்னிப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இவ்வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. இதையடுத்து, சீமான் மற்றும் நடிகை தரப்பினர் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதை மீறக்கூடாது” என்று உத்தரவிட்டனர்.