தமிழ்நாடு

திருமாவளவன் கருத்துக்கு பெருகும் ஆதரவு!

ராம் அப்பண்ணசாமி

`எந்த சூழலிலும் எந்த காலத்திலும் ஒரு தலித் மாநிலத்தின் முதலமைச்சராக முடியாது’ என்று நேற்று (ஆகஸ்ட் 14) நடந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசினார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். அவர் பேசியவை பின்வருமாறு:

`மாநிலங்களில் விதிவிலக்காக உத்தர பிரதேசத்தில் மாயாவதி முதல்வரானார். எந்த சூழலிலும் எந்த காலத்திலும் ஒரு தலித் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக முடியாது. இதை விவாதித்தால் ஏன் நாடாளுமன்றத்தோடு இந்த அதிகாரம் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

நமக்கு திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது சரி. ஆனால் திமுக அரசு என்பது நிலையானது அல்ல, மாநில அரசுதான் நிலையானது. கட்சிகள் வரும் போகும், அது வேறு. சமூக நீதியின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் வருவார்கள் போவார்கள், அது வேறு. ஒரு மாநில அரசில் எந்தச் சூழலிலும் ஒரு தலித் முதல்வராக முடியாது. அந்த நிலை இங்கே இல்லை’

திருமாவளவன் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த மக்களவை எம்.பி. கார்த்தி சிதம்பரம், `தலித்துகள் முதலமைச்சர்களாக வர முடியவில்லை என்ற திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன். சமூதாய சூழல் அவ்வாறு உள்ளது. தமிழகத்திலும் அதே நிலைமைதான் நீடிக்கிறது. தலித் தலைமையை ஏற்பதில் பல மாநிலங்களில் தயக்கம் காட்டுகிறார்கள்’ என்றார்.

மேலும், இது குறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், `தலித்துகள் முதலமைச்சராக முடியாது எனக் கூறிய திருமாவளவன் கருத்தை ஏற்கிறேன். ஆனால் திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது என்ற கருத்தை எதிர்க்கிறேன்’ என்றார்.