சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் புதிதாக ஹிந்தியில் வானிலை அறிக்கை வெளியிடப்படுவதாக எம்.பி. சு. வெங்கடேசன் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் விளக்கமளித்துள்ளார்.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையமானது தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கையை அதன் இணையதளத்தில் ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளியிட்டு வந்தது.
இந்நிலையில், புதிதாக ஹிந்திலும் வானிலை அறிக்கையை சென்னை மண்டல ஆய்வு மையம் வெளியிட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியது. தென்னிந்திய மாநிலங்களில் முதல்முறையாக தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்தியில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விமர்சித்து, மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை ஹிந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத மத்திய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் ஹிந்தியைத் திணிக்கிறது. பாஜகவிற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்த நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும்’ என்றார்.
இது குறித்து விளக்கமளித்துள்ள சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் அமுதா, உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் ஹிந்தியில் வானிலை அறிக்கை வழங்கும் நடைமுறை அக்டோபர் 2024 முதல் அமலில் உள்ளதாக கூறியுள்ளார்.