போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஜனவரி 9 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. டிசம்பர் 19-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்துக்கான நோட்டீஸ் டிசம்பர் 19-ம் தேதி கொடுத்தார்கள். இதையடுத்து, போக்குவரத்துத் துறையுடன் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படவில்லை.
ஜனவரி 9 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டாலும்கூட, பேருந்துகள் வழக்கம்போல இயங்கி வருவதாக போக்குவரத்துத் துறை தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. தமிழக அரசுத் தரப்பில், 7 ஆயிரம் தொழிலாளர்களா, பொதுமக்களின் நலனா என்கிற நிலைக்கு அரசு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிதிச் சுமையைக் காரணம் காட்டி, தற்போதைய நிலையில் அகவிலைப்படி உயர்வு வழங்க முடியாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வு, இருதரப்பும் அவரவர் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பதாகத் தெரிவித்தது.
இதன்பிறகு சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், பணிக்குத் திரும்பும் தொழிலாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என அரசிடம் தெரிவித்தது.