தமிழ்நாடு

திட்டக் குழு அறிக்கைதான், எங்களுக்கான மார்க் ஷீட்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

"நிதி ஆயோக் அறிக்கையை முன் மாதிரியாகக் கொண்டு உங்களது ஆய்வறிக்கை ஒன்றை வழங்க வேண்டும்."

கிழக்கு நியூஸ்

மாநில திட்டக் குழு அளிக்கும் அறிக்கைதான், தங்களுக்குத் தரப்படும் மார்க் ஷீட் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக் குழுவின் 5-வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. திட்டக் குழுவின் 4-வது கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட புதுமைப் பெண் திட்டத்தின் தாக்கம், முதல்வரின் காலை உணவுத் திட்டம் உள்ளிட்டவற்றால் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள தாக்கம் உள்ளிட்டவை குறித்த ஆய்வு முடிவுகள் குறித்து விவரிக்கப்பட்டன.

மேலும், மாநில திட்டக் குழுவால் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களான தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டம், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம், வளமிகு வட்டாரங்கள் திட்டம், தமிழ்நாடு நிலப்பயன்பாட்டு ஆராய்ச்சி வாரிய பணிகள் பற்றியும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் பற்றியும் விரிவாக விவரிக்கப்பட்டன.

மக்களின் கல்வி, மருத்துவம், சுகாதாரம், சத்துணவு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்குடன் மாநிலத் திட்டக் குழு துரிதமாக செயல்பட்டு அரசுக்கு ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை வகுக்கவும், பரிந்துரைக்கவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றியதாவது:

"கடந்த மார்ச் மாதம் என்னைச் சந்தித்த மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், துறை சார்ந்த 16 அறிக்கைகளை அளித்தார். தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு திட்டமும் எந்த அளவுக்கு மக்களுக்குப் பயனுள்ள திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அந்த அறிக்கை மூலமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த அறிக்கையைதான், எங்களுக்கு தரப்படும் மார்க் ஷீட்டாக நான் நினைக்கிறேன்.

காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் பள்ளி வருகை உயர்ந்துள்ளது என்பதை அறிந்தேன். இதனைவிட மகிழ்ச்சியான செய்தி வேறு எதுவும் இருக்க முடியாது. மகளிர் உரிமைத் தொகை மூலமாக பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் அதிகமாகி இருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணம் மூலமாகப் பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி உள்ளது. புதுமைப் பெண் திட்டத்தின் காரணமாக கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இப்படி ஒவ்வொரு திட்டமும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் உயர்த்தி வருகிறது.

இந்த தகவல்களை எல்லாம் மக்களிடமிருந்து நேரடியாக நாங்கள் அறிந்தாலும், புள்ளிவிவரங்களாக நீங்கள் வழங்கி வருகிறீர்கள். இந்தத் திட்டக்குழு அமைக்கப்பட்டு முதல் முறையாக உங்களைச் சந்தித்தபோது நான் குறிப்பிட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

நமது மாநிலத்தின் வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!

ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் இல்லை என்பதை உருவாக்க வேண்டும் என்று நான் அப்போது குறிப்பிட்டேன்.

இதே அடிப்படையில்தான், கடந்த மூன்றாண்டுகளாக எண்ணற்றத் திட்டங்களைத் தீட்டினோம். இன்னும் புதிய திட்டங்கள் வர இருக்கின்றன.

மாநில திட்டக்குழுவின் மூலமாக நான் எதிர்பார்ப்பது, புதிய, புதிய சிந்தனைகளை திட்ட வடிவங்களை நான் எதிர்ப்பார்க்கிறேன். கவனம் பெறாத துறைகளில் கவனம் செலுத்தி புதிய திட்டங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கல்வித் துறையில், வேளாண்மையில், உள்கட்டமைப்பு வசதியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக வளர்ந்துவிட்டது. அனைத்துத் துறையும் சமச்சீராக வளர்ந்து வருகிறது.

அண்மையில் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை, மிக மிக மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அந்த அறிக்கையை முன் மாதிரியாகக் கொண்டு உங்களது ஆய்வறிக்கை ஒன்றை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திராவிட மாடல் ஆட்சியின் நோக்கங்களை, சாதனைகளைச் சொல்லும் வகையில் ஒரு மாபெரும் கருத்தரங்கை சென்னையில் நீங்கள் நடத்திட வேண்டும். அதில் பல்துறை அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களைப் பங்கேற்க வைத்து, அவர்களது ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று, அதனை வெளியிடுமாறு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.