தமிழ்நாடு

2026 சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையை இன்றே தொடங்குங்கள்: திமுக

இனி எந்நாளும் திமுகதான் தமிழ்நாட்டை ஆளும், ஆளவேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்கள்.

ராம் அப்பண்ணசாமி

2026 சட்டப்பேரவை தேர்தலுக்குத் தயாராகும் வகையில் இன்றுமுதல் தேர்தல் பரப்புரையை தொடங்க நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் இன்று (நவ.20) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் புறந்தள்ளி ஹிந்திக்கு விழா எடுப்பது, சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் காலந்தாழ்த்துவது, சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள் கொண்டு வருவது, தொடர் ரயில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்காததது, மாநில அரசுக்கான நிதியை விடுவிக்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம்.

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது, படகு பறிமுதல், அபரிமிதமான அபராதத் தொகை, சிறைத் தண்டனை, மீனவர்கள் மீது தாக்குதல் ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது. இலங்கைச் சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யவும், இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்துள்ள படகுகளைத் திரும்ப பெறவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 18 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் நிலையில், பிரதமர் மோடி அமைதி காப்பது அம்மாநிலத்தை ஒன்றிய அரசு கைவிட்டதாகவே தெரிகிறது. இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனிக்கவனம் செலுத்த கோரிக்கை.

இனி எந்நாளும் திமுகதான் தமிழ்நாட்டை ஆளும், ஆளவேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் இன்றுமுதல் தேர்தல் பரப்புரையை தொடங்க நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வேண்டுகோள். துண்டுப் பிரசுரங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள் என மக்கள் இயக்கத்தைத் தொண்டர்கள் அனைவரும் தொடங்க வேண்டும்.