தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின்

ராம் அப்பண்ணசாமி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு நேரில் சென்றுள்ளார்.

கடந்த ஜூன் 5-ல் பகுஜன் சமாஜ் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், புதிதாகக் கட்டப்பட்டு வந்த அவரது பெரம்பூர் இல்லத்துக்கு வெளியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து ஜூன் 8 அதிகாலையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் செங்குன்றத்தை அடுத்த பொத்தூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை, சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்குச் சென்றார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அப்போது ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் இருந்த உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்.

இதை அடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு முதல்வர் தன் ஆறுதல்களைத் தெரிவித்தார். அப்போது ஆம்ஸ்ட்ராங் மரணம் குறித்து கண்ணீர் மல்க முதல்வரிடம் முறையிட்டார் பொற்கொடி. இதனைத் தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சட்டப்படி விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று பொற்கொடியிடம் ஸ்டாலின் உறுதி அளித்துப் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்மந்தமாக தமிழக காவல்துறை பத்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்து விசாரித்து வருகிறது. முதல்வர் ஸ்டாலினுடன் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு அமைச்சர் பி.கே.சேகர் பாபு, வில்லிவாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் ஆகியோரும் உடன் சென்றனர்.