தனியார் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்ட அரசு நிலத்தில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவை இன்று (அக்.07) சென்னையில் திறந்துவைக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை அண்ணாசாலைக்கு அருகே உள்ள கதீட்ரல் சாலையின் இரு புறங்களிலும் அமைந்திருந்த சுமார் 23 ஏக்கர் அரசு நிலம் கடந்த 1910-ல் தனியார் அமைப்பான வேளாண் தோட்டக்கலை சங்கத்துக்கு அன்றைய சென்னை மாகாண அரசால் குத்தகைக்கு விடப்பட்டது.
குத்தகை காலம் முடிந்தும் தனியார் அமைப்பின் ஆக்கிரமிப்பில் இருந்த 23 ஏக்கர் நிலத்தில் இருந்து, சுமார் 17 ஏக்கர் நிலத்தை மீட்டு அதில் 2009-ல் செம்மொழிப்பூங்காவை அமைத்தார் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி. இதன்பிறகு கடந்த ஜூன் 2023-ல் தனியார் அமைப்பின் கட்டுப்பாட்டில் மீதமிருந்த சுமார் 6 ஏக்கர் நிலத்தை மீட்டது தமிழக அரசு.
இந்நிலையில் இந்த 6.09 ஏக்கர் நிலத்தில் ரூ. 25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நடப்பாண்டு பிப்ரவரி 27-ல் கலைஞர் நூற்றாண்டு பூங்கா திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்.
இதைத் தொடர்ந்து தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையால் ரூ. 45.99 கோடி செலவில் நூற்றாண்டு பூங்கா பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இன்று மாலை 6 மணிக்குத் திறந்துவைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இந்தப் பூங்காவில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், பார்வையாளர்களைப் படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், 50 மீட்டர் ஜிப்லைன், தொடர் கொடி வளைவு பாதை, 120 அடி நீளம் உடைய பனிமூட்ட பாதை, 2600 சதுர அடி பரப்பிலான ஆர்க்கிட் குடில், 10,000 சதுர அடி பரப்பிலான கண்ணாடி மாளிகை, வெளிநாட்டு பறவையகம், மர வீடு, பசுமை குகை, இசை நீரூற்று, பாரம்பரிய காய்கறி தோட்டம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பூங்கா நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 100 மற்றும் சிறியவர்களுக்கு ரூ. 50 நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சிறப்பு அம்சங்களைப் பார்வையிட தனித்தனியாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அத்துடன் புகைப்பட கருவிகளுக்கு ரூ. 100, வீடியோ கேமராக்களுக்கு ரூ. 5000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
இணையதளத்தின் வாயிலாக நுழைவுகட்டணம் குறித்த தகவல்கள் மற்றும் நுழைவுச்சீட்டினைப் பெற: https://tnhorticulture.in/kcpetickets