கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி?: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்

"வெறும் பரபரப்புக்காக உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளதாக வதந்திகளைக் கிளப்புகிறார்கள்."

கிழக்கு நியூஸ்

உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்குப் பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 28-ம் தேதி ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இளைஞரணி மாநாட்டுக்குப் பிறகு, வெளிநாடுகளுக்குப் புறப்படும் முன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

இதற்கு பொங்கல் வாழ்த்து மடலில் முற்றுப் புள்ளி வைத்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

வாழ்த்து மடலில் முதல்வர் கூறியுள்ளதாவது:

"சேலம் மாநாட்டுக்கு இளைஞர்கள் தயாராகிக் கொண்டிருந்தபோது எனது உடல்நிலை குறித்து வதந்திகளைக் கிளப்பினார்கள். நான் ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன்.

இந்தப் பொய்களை உடைத்தபிறகு, பரபரப்பை ஏற்படுத்துவதற்காக உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளதாக வதந்திகளைக் கிளப்பினார்கள். அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு உதவி செய்பவர்கள் என உதயநிதி ஸ்டாலினே வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார்.

மாநில உரிமைகளை வலியுறுத்தும் இளைஞரணி மாநாட்டிலிருந்து கவனம் திசை திருப்பப்படுவதை அனுமதிக்கக் கூடாது. மாநாட்டின் நோக்கமே மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தைப் பாதுகாப்பதாகும். இதை எதிர்ப்பவர்கள் வதந்திகளைக் கிளப்புவார்கள்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.