மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டின் 8 மக்களவை தொகுதிகள் பறிபோகும் அபாயம் உள்ளதாகக் கூறி, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்.25) தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நிறைவடைந்த பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,
`இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை குறித்து பல்வேறு விளக்கங்களை நிதித்துறை அதிகாரிகள் தெளிவாக எடுத்துக் கூறினார்கள். அது மட்டுமல்லாமல், அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. மார்ச் 5-ல் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த முடிவெடுத்து 40 கட்சிகளுக்கு இன்று அழைப்பு விடுக்கவுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அந்த கூட்டத்தில் பேசவிருக்கிறோம்.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைமைக்கு மேலே கத்தி ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முதன்மையான மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.
தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் 39 மக்களவை தொகுதிகளை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 2026-ல் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுசீரமைக்கப்படவுள்ளது. இப்படியான நடவடிக்கை பொதுவாகவே மக்கள்தொகை கணக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முன்வைத்த இலக்கை தமிழ்நாடு அடைந்துள்ளது. மக்கள்தொகை குறைவாக இருக்கும் காரணத்தினாலேயே நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டிற்கு 39 எம்.பி.க்கள் அல்ல 31 எம்.பி.க்கள் மட்டுமே இருப்பார்கள். நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். தமிழ்நாட்டின் குரல் இவ்வாறு நசுக்கப்படுகிறது. இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்த கவலை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமையும் சார்ந்தது.
அரசியல் கடந்து இந்த கூட்டத்தில் ஒன்று சேர்ந்து அனைத்துக் கட்சிகளும் பங்கேற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.