ஸ்டாலின் ANI
தமிழ்நாடு

தமிழ்நாடு கல்வித்துறையில் வளர்ச்சி: ஸ்டாலின் பெருமிதம்

யோகேஷ் குமார்

அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சி கண்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு கல்வித்துறையின் வளர்ச்சிக் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“தமிழ்நாடு அரசின் கல்வித் திட்டங்களால் உயர் கல்வியில் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது எனவும் பெண்களின் உயர் கல்விச் சேர்க்கை விகிதம் 34% உயர்ந்திருக்கிறது எனவும் மாநில அரசு தெரிவித்திருப்பது, இளம் தலைமுறையினரின் முன்னேற்றம் குறித்த நம்பிக்கையை அளிக்கிறது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவியரின் உயர் கல்விச் சேர்க்கை விகிதம் குறைந்தது, உயர் கல்வி பயில இயலாத மாணவியர் திருமணம் செய்விக்கப்பட்டது போன்ற அவலங்களுக்கு முடிவுகட்டும் வகையில், ஒரு புதிய திட்டத்தைத் தமிழ்நாடு அரசு 2022-ல் அறிவித்தது. அதுவரை பெண்களின் திருமணத்துக்காகச் செயல்படுத்தப்பட்டுவந்த நிதியுதவித் திட்டத்தை, 'மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்ட'மாக (புதுமைப் பெண் திட்டம்) மாற்றி அறிவித்தது. அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற பெண்களின் உயர் கல்விக்காக மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ. 1,000 செலுத்தும் திட்டத்தை செப்டம்பர் 2022 முதல் தமிழக அரசு செயல்படுத்திவருகிறது. அந்தத் திட்டத்தின்கீழ் 2.73 லட்சம் மாணவியர் பயன்பெற்றுவருவதாக அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.

மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காகவும் போட்டித் தேர்வுகள் உள்ளிட்டவற்றுக்கு அவர்களைத் தயார்செய்யும் வகையிலும் 'நான் முதல்வன்' என்னும் வழிகாட்டித் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 27 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதோடு, தொழில் வழிகாட்டி மூலம் 1.9 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். முதல் தலைமுறை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகக் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 1,000 கோடி செலவிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பெண்களின் உயர் கல்வி விகிதம் அதிகரித்திருப்பதால் பெண்கள் வேலைக்குச் செல்வது அதிகரித்து, அவர்களின் சமூகப் பொருளாதாரப் பங்களிப்பும் உயரும். ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் உயர் கல்வி பெறும்போது கல்வித் துறையில் பாலினச் சமத்துவத்தை அடைவதற்கான சாத்தியத்தை அது ஏற்படுத்தும். 'புதுமைப் பெண்' திட்டத்தால் வீட்டில் உள்ள அனைத்துப் பெண் குழந்தைகளும் பயன்பெறலாம் என்பதும் பிற கல்வி ஊக்கத் தொகைத் திட்டங்களைப் பெற இது தடையாக இருக்காது என்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள். அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கியதாகத் திட்டம் பரவலாக்கப்படும்போது, அது ஏற்படுத்தும் மாற்றமாகத்தான் பெண்களின் உயர் கல்விச் சேர்க்கை விகிதத்தைப் பார்க்க வேண்டும்.

மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தொய்வின்றிச் செயல்படுத்தப்படும்போதுதான் அவை தொடங்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறும். 'புதுமைப் பெண்', 'நான் முதல்வன்' போன்ற திட்டங்களில் அந்த நம்பிக்கையை இளம் தலைமுறையினருக்கு அரசு ஏற்படுத்த வேண்டும்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.