ஏஐ உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட படம் 
தமிழ்நாடு

இருமல் மருந்து விவகாரம்: ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தை மூட தமிழ்நாடு அரசு உத்தரவு! | Coldrif |

கடந்தாண்டில், உரிய ஆய்வு மேற்கொள்ளாத காஞ்சிபுரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

மத்தியப் பிரதேசத்தில் இருமல் மருந்தை அருந்தி குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரத்தில் இயங்கி வந்த ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அன்று (1.10.2025) பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், மத்தியப் பிரதேச மாநில மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறைக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது.

அக்கடிதத்தில், 4.9.2025 முதல் மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாகக் கருதப்படும் மருந்து, கோல்ட்ரிஃப் சிரப் (பாராசிட்டமால், ஃபீனைல்ஃப்ரைன் ஹைட்ரோகுளோரைடு, குளோரிபெனிரமைன் மெலேட் சிரப்), குறித்த விவரம் பெறப்பட்டது.

இது தொடர்பாக, அன்றைய தினமே (01-10-2025) சுமார் 4.00 மணியளவில், துணை மருந்து கட்டுப்பாடு இயக்குனரின் உத்தரவின் பேரில், முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் தலைமையிலான குழு, ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் 01-10-2025 அன்றே தமிழ்நாடு முழுவதும் சந்தேகத்திற்குரிய கோல்ட்ரிஃப் மருந்து (Coldrif Syrup) விற்பனை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டது.

அக்குழு (01-10-2025 to 02-10-2025) மேற்கொண்ட தொடர் ஆய்வில் மருந்துகள் விதிகள், 1945-இன் கீழ் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, சர்ச்சைக்குரிய மருந்தான கோல்ட்ரிஃப் மருந்து பேட்ச் எண்: எஸ்ஆர்-13 உள்ளிட்ட 5 மருந்துகள் அவசரப் பகுப்பாய்வுக்காக எடுக்கப்பட்டு அரசு மருந்துகள் பகுப்பாய்வு கூடம், சென்னைக்கு அனுப்பப்பட்டது. பகுப்பாய்வின் முடிவில் டைஎதிலீன் கிளைகால் (Diethylene Glycol, DEG) என்ற உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள், கோல்ட்ரிஃப் மருந்தில் 48.6 சதவீதம் (48.6% w/v) இருப்பதாக 02-10-2025 அன்று கண்டறியப்பட்டது.

மேலும், மேற்கூறிய நிறுவனத்திலிருந்து, ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு கோல்ட்ரிப் மருந்து விநியோகிக்கப்பட்டதாகத் தகவல் கிடைக்கப் பெற்றது. விபரம் பெறப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடர்பான தகவல்கள், 2-10-2025 அன்றே மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது.

இந்த சளி மருந்தில் டைஎதிலீன் கிளைகால் என்ற நச்சு வேதிப்பொருள் கண்டறியப்பட்டதால், 03-10-2025 அன்றே, ஸ்ரீசன் பார்மசியூட்டிகள், நிறுவனத்திற்கு பொதுநலன் கருதி மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்நிறுவனம் அதிகாரிகளால் உடனடியாக மூடப்பட்டது. மேலும் தொடர் நடவடிக்கையாக ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து உரிமங்கள் முழுவதுமாக ஏன் ரத்து செய்யப்படக்கூடாது என விளக்கம் கேட்டு 03.10.2025 அன்றே குறிப்பாணையும் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல் உயிர் இழப்பு 04.09.2025 அன்று ஏற்பட்ட நிலையில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடுத் துறைக்கு 01.10.2025 அன்றே தகவல் அனுப்பப்பட்டது. இவ்வாறு, தகவல் பெறப்பட்ட 48 மணிநேரத்தில் தமிழ்நாடு அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அம்மருந்து நிறுவனத்தில் புலனாய்வு மேற்கொண்டு, சர்ச்சைக்குரிய மருந்தை ஆய்வுக்குட்படுத்தி, தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள மருந்துகளையும், தமிழ்நாட்டில் விற்பனையில் உள்ள மருந்துகளையும் தடைசெய்து, அம்மருந்தில் விஷத்தன்மையுள்ள வேதிப்பொருள் டைதிலீன் கிளைகால் இருப்பதை கண்டறிந்து, அந்நிறுவனத்தின் மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்தி மூடப்பட்டு, மேல் நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் உரிமங்களை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டும், இம்மருந்து விநியோகம் செய்யப்பட்ட மாநிலங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவல்கள் அனைத்தும் மத்தியப் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் உடனடியாக, 03.10.2025 அன்று மின்னஞ்சல் மூலமாக மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. மேலும், 03.10.2025 அன்றே Drugs Controller General of India (DCGI) மற்றும் Deputy Drug Controller, தெற்கு மண்டலம், சென்னை அவர்களுக்கும் விரிவான அறிக்கை மற்றும் அந்நிறுவனத்தில் உற்பத்தி நிறுத்திய ஆணை அனுப்பப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கோல்ட்ரிஃப் என்ற மருந்தின் ஆய்வு அறிக்கையில் கண்டறியப்பட்ட டைஎதிலீன் கிளைகால் 48.6 % நச்சு பொருள் இருந்ததன் காரணமாக அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்ற நடவடிக்கை எடுத்து அந்நிறுவன உரிமையாளர் தலைமறைவானதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்காக குற்றவியல் குறிப்பாணை 07.10.2025 அன்று மருந்து ஆய்வாளர் மூலம் அந்நிறுவனத்தின் வெளிபுறமும், உரிமையாளரின்

வீட்டின் கதவிலும் ஒட்டப்பட்டது.

மேலும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள சி-2 சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் புகார் கொடுக்கப்பட்டது.

தமிழ்நாடு காவல் துறையின் உதவியுடன் மத்தியப் பிரதேச சிறப்புப் புலனாய்வு பிரிவு, 09-10-2025 அன்று அதிகாலை சென்னை அசோக் நகர் பகுதியில் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன், (வயது 75) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அந்நிறுவனத்தில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஆய்வு முறையாக மேற்கொள்ளப்பட்டு இந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டில், உரிய ஆய்வு மேற்கொள்ளாத காஞ்சிபுரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இன்று (13-10-2025), ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coldrif | Cough Syrup | Sresan Pharmaceuticals Company | Sresan Pharmaceuticals |