Photographer: James Gathany
தமிழ்நாடு

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு: 3 பேர் மரணம்

ராம் அப்பண்ணசாமி

சென்னை தி.நகரில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். இந்த நிகழ்வில் காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க வீடு வீடாக துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டன.

இதை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், `கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 24 வரை, தமிழ்நாட்டில் 6,565 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில் மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மருத்துவத்துறை முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

476 இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பில் அனுமதிக்கப்படும் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. அதே நேரம் மாநில எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

ஏடிஎஸ் வகை கொசுக்களால் பரவும் டெங்கு நோய்க்கு தடுப்பூசி கிடையாது. கொசுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியும். மேலும் டெங்குவுக்கென தனியாக மருந்துகள் இல்லாத நிலையில் காய்ச்சலைக் கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய் பாதிப்பின் வீரியத்தைக் குறைக்கலாம்.

பெரியவர்களைவிட குழந்தைகள் டெங்குவால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ரத்தத்தில் தட்டணுக்களின் அளவு குறைவதும் உயிரிழப்புகளுக்குக் காரணமாகிறது. மேலும் டெங்கு நோய் பாதிப்பைத் தாமதமாகக் கண்டறிதலும் உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கிறது.