இதுவரை 2.59 கோடி படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். 
தமிழ்நாடு

உங்களுடைய SIR படிவத்தை BLO சமர்ப்பித்துவிட்டாரா?: தெரிந்துகொள்ளுங்கள்! | SIR |

ஆதார் படிவத்தைச் சமர்ப்பிக்கச் சொல்லி கேட்டால், உங்களுடைய படிவம்..

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர் - SIR) மேற்கொள்வதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மிகத் தீவிரமாக நடத்தி வருகிறது. மாநிலம் முழுக்க நவம்பர் 4 முதல் வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார். சுமார் 6.16 கோடி பேருக்கு அதாவது 96 சதவீதத்தினருக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார். இதுவரை 2.59 கோடி படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

படிவங்களை நிரப்பிக் கொடுத்தவுடன் BLO எனும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் உங்களுடைய படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அவர் படிவத்தைச் சரிவர சமர்ப்பித்துவிட்டாரா இல்லையா என்பதை இணையத்தின் மூலம் வாக்காளர்கள் அறிந்துகொள்ளலாம்.

  1. https://voters.eci.gov.in/ என்ற இணையதளப் பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.

  2. வலப்புறமாக, பச்சை நிறப் பெட்டியில் 'Fill Enumeration Form' என்று இருக்கும். அதை க்ளிக் செய்யவும்.

  3. உங்களுடைய மொபைல் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். கீழே கேப்ச்சா (Captcha) என்று இருக்கும். அதை நிரப்பியவுடன் ஓடிபியை பெறுங்கள்.

  4. ஓடிபியை செலுத்தியவுடன் உள்ளே நுழைந்துவிடலாம்.

  5. உள்ள நுழைந்தவுடன், மீண்டும் முன்பு வந்த அதே பக்கத்தினுள் அழைத்துச் செல்லும். இதில் மேலே குறிப்பிட்டது போல வலப்புறமாக, பச்சை நிறப் பெட்டியில் 'Fill Enumeration Form' என்று இருக்கும். அதை க்ளிக் செய்யவும்.

  6. அடுத்து உங்களுடைய மாநிலத்தைத் தேர்வு செய்யச் சொல்லும். அதைத் தேர்வு செய்தவுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பதிவு செய்யச் சொல்லி கேட்கும். அதையும் பதிவிட வேண்டும்.

  7. உங்களுடைய படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலரால் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டால், ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கும். இதன்மூலம், உங்களுடைய கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பிக்கப்பட்டதை உறுதி செய்துகொள்ளலாம்.

  8. ஒருவேளை ஆதார் படிவத்தைச் சமர்ப்பிக்கச் சொல்லி கேட்டால், உங்களுடைய படிவம் இன்னும் சமர்ப்பிக்கப்படாமல் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

  9. கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பிக்கப்படாமல் இருந்தால், உடனடியாக உங்களுக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரைத் தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டறியவும்.

லாக்-இன் செய்ய முடியாவிட்டால், மொபைல் எண்ணைக் கொண்டு சைன் அப் செய்து சரி பார்த்துக் கொள்ளலாம்.

இணைப்பு: https://voters.eci.gov.in/

Special Intensive Revision | Election Commission | SIR | BLO |