சென்னை வான் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த மக்கள் பறக்கும் ரயில் கூடுதலாக இயக்கப்படாததால் சிரமமடைந்ததாகக் குற்றம்சாட்டிய நிலையில், தெற்கு ரயில்வே இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளது.
இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் இன்று வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.
காலை 11 மணிக்கு வான் சாகச நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், காலை 9 மணியிலிருந்து பொதுமக்கள் மெரினா நோக்கி படையெடுக்கத் தொடங்கினார்கள். ஒரே நேரத்தில் 10 லட்சம் பேர் திரண்டதால் கூட்ட நெரிசலில் மெரினா சிக்கியது. வாகனங்களை நிறுத்துவதில் பிரச்னை ஏற்பட்டது.
நிகழ்ச்சி முடிந்து மெரினாவிலிருந்து புறப்படுவதில் பெரும் சிக்கலானது. குறுகிய சாலைகளில் வாகனங்கள் செல்வதும் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதும் ஒரே நேரத்தில் நிகழ, வெயிலில் மக்கள் சோர்வின் உச்சத்தை அடைந்தார்கள். குறிப்பாக, பொதுப்போக்குவரத்து மீது மக்கள் பெருமளவு விமர்சனங்களை வைத்தார்கள்.
இதிலும் குறிப்பாக, தெற்கு ரயில்வே கூடுதல் ரயில்களை இயக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கூடுதல் சப்தத்துடன் ஒலித்தது. ரயில் நிலையங்களில் மக்கள் வெள்ளமும், தண்டவாளங்களில் நடந்து சென்ற காட்சிகளும் இந்தக் குற்றச்சாட்டை ஊர்ஜிதப்படுத்தின. அரை மணி நேரத்துக்கு ஒருமுறை மட்டுமே தெற்கு ரயில்வேயால் ரயில் இயக்கப்பட்டதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
"சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6 அன்று இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் கருத்தில் கொண்டு, பெரிதளவிலான பயணிகள் எண்ணிக்கையை சரிவர கையாள தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலத்தால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம் மற்றும் லைட்ஹவுஸ் ரயில் நிலையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ரயில் நிலையங்களில் கூடுதல் பயணிகளின் வருகையைக் கையாள்வதற்காக தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலத்தால் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள்:
அடிக்கடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. யூடிஎஸ் செயலி மற்றும் க்யூஆர் கோட் மூலம் பயணச் சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு பயணிகளிடம் அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக பரவலாக விளம்பரமும் செய்யப்பட்டது.
பயணிகளுக்கு உதவுவதற்காக அனைத்துத் துறை வர்த்தக ஆய்வாளர்களும் ரயில் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டார்கள். திரும்ப வருவதற்கான பயணச் சீட்டையும் தற்போதே பெற்றுக்கொள்ளுமாறு பயணிகள் ஊக்கப்படுத்தப்பட்டார்கள். பயணச்சீட்டு வழங்கு அதிகாரி அறிவுறுத்தியது மட்டுமில்லாமல், தகவல் பலகையிலும் இது அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தைக் கண்காணிக்கவும், பயணிகளுக்கு எந்தப் புகாரும் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்யவும் சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம் மற்றும் லைட்ஹவுஸ் ரயில் நிலையங்களில் வர்த்தக ஆய்வாளர்கள் மற்றும் ரயில் காவல் துறையினர் குழு பணியமர்த்தப்பட்டார்கள்.
அனைத்து பறக்கும் ரயில் நிலையங்களிலும் பயணச்சீட்டை வழங்குவதற்காக கூடுதல் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக அனைத்து பறக்கும் ரயில் நிலையங்களிலும் பயணச்சீட்டை பரிசோதனை செய்யும் சிறப்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
கவுன்ட்டர்களில் வரிசையின் நிற்கும் மக்களின் கூட்டத்தைக் குறைக்கும் வகையில், சிறப்புக் குழுவினர் மூலம் பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
பயணச்சீட்டு விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக சென்னை மண்டலத்தின் மற்ற இடங்களிலிருந்து பயணச்சீட்டு வழங்கும் கருவிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
க்யூஆர் கோட் பயணச்சீட்டு வழங்கும் அனைத்து கவுன்ட்டர்கள் மற்றும் ரயில் நிலையங்களிலுள்ள பொது இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. விமான சாகச நிகழ்ச்சிக்கு செல்லக்கூடிய சாலைகளிலும் வைக்கப்பட்டுள்ளன. ஊடகங்களிலும் இதுதொடர்புடைய தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
சென்னை மண்டலத்தின் மூத்த அதிகாரிகள் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
பறக்கும் ரயில்களில் இயல்பாக ஒருநாளைக்கு 55 ஆயிரம் பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள். இன்று மாலை 4.30 மணி நிலவரப்படி விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சியால் ஏறத்தாழ 3 லட்சம் பயணிகளாக உயர்ந்துள்ளது.
தெற்கு ரயில் சென்னை மண்டலத்தின் பறக்கும் ரயில் பிரிவில் 4-ம் வழித்தடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தபோதிலும், முடிந்தளவுக்குக் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டன. பயணிகளின் அசௌகரியத்தைக் குறைக்க முடிந்தளவிலான அனைத்து வளங்களும் பயன்படுத்தப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாள்களில் எத்தனை மணி நேரத்துக்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும், இன்று எத்தனை மணி நேரத்துக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்பட்டன என்பது குறித்த தகவல் இதில் இடம்பெறவில்லை.