படம்: https://twitter.com/BJP4TamilNadu
படம்: https://twitter.com/BJP4TamilNadu
தமிழ்நாடு

தென் சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன் வேட்புமனு தாக்கல்

கிழக்கு நியூஸ்

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் பாஜவில் மீண்டும் இணைந்தார். இதைத் தொடர்ந்து, தென் சென்னை தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால், தமிழ்நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள், நட்சத்திர வேட்பாளர்கள் உள்ளிட்டோர் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகிறார்கள். தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனும் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு தமிழிசை கூறியதாவது:

"பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். தென் சென்னை தொகுதியில் மிகவும் பொறுப்பான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் நீண்டகாலமாக ஒரு நல்ல நாடாளுமன்ற உறுப்பினருக்காகக் காத்திருக்கிறார்கள். தற்போதைய எம்.பி. எளிதில் அணுகக்கூடியவராக இல்லை. ஆனால், என்னை மிக எளிதில் அணுகிவிடலாம். அரசியலமைப்புப் பொறுப்பை வகித்திருந்தபோதே நான் மக்களுடன் உரையாடுவேன். மக்களுக்காக நேரடியாகப் பணியாற்ற வேண்டும் என்பதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்" என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.