கோப்புப்படம் 
தமிழ்நாடு

காய்ச்சல் வந்தால் ஆன்டிபயாடிக்கை உட்கொள்ளலாமா..? கூடாதா..?

"பாராசிடமால் மாத்திரைகளை சாதாரண காய்ச்சலுக்கு நாம் போட்டுக்கொள்ளலாம். ஆனால்..."

கிழக்கு நியூஸ்

பருவமழை தொடங்கியதிலிருந்து நிறைய பேருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைகள் வருகின்றன. சிறு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பதைக் காண முடிகிறது. இவர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு உள்ளதா என்றால், இல்லை. நிறைய பேர் மருத்துவரை நாடாமல் அவர்களே மாத்திரைகளை உட்கொண்டு, அடுத்த நாள் அன்றாடப் பணியைத் தொடர்கிறார்கள்.

இப்படி மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகளை உட்கொள்ளலாமா, அதிக எண்ணிக்கையில் பாராசிடமால் உட்கொண்டால் என்ன நடக்கும், ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட்கொள்ளும் முறை என்ன, தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எல்லோருக்குள்ளும் இருப்பது இயல்பு. எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் சௌமியா சுவாமிநாதன் இந்த சந்தேகங்கள் அனைத்துக்கும் எளிமையாகப் பதிலளித்துள்ளார்.

"கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், நிறைய பக்கவிளைவுகள் ஏற்படுவதாக மக்கள் மத்தியில் உணர்வு இருந்தது.

உண்மை என்னவெனில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு, நீரிழிவு நோய், பக்கவாதம் போன்ற பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். காரணம், இந்த வைரஸ் உடலில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இரண்டு அல்லது மூன்று முறை கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால், இன்னும் அபாயகரமான நிலை.

மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொண்டது மட்டும்தான் நினைவில் உள்ளது. இதனால்தான், தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் இப்படி நடக்கிறதோ என்று அவர்கள் நினைக்கிறார்கள். உண்மை என்னவெனில், கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், இந்த அபாயம் அதிகரித்துள்ளது.

எந்தவொரு தடுப்பூசியை எடுத்துக்கொண்டாலும், அதில் பக்கவிளைவு இருக்கத்தான் செய்யும். 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தினால், இவர்களில் ஒருவர் அல்லது இருவருக்குப் பக்கவிளைவு ஏற்படும். மற்றவர்களுக்கு அதனால் பலன்தான் இருக்கும்.

எனவே, கரோனா தொற்றுக்குப் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசியிலும் ஓரிருவருக்குப் பக்கவிளைவுகள் இருக்கும். சிலருக்கு சாதாரண அளவில் பக்கவிளைவுகள் ஏற்படலாம். சிலருக்கு தீவிரமாகப் பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஆனால், மற்ற 10 லட்சம் மக்களுக்கு இது பயனளிக்கிறது. இல்லையெனில், பெருந்தொற்று காலத்தில் இன்னும் நிறைய பேர் உயிரிழந்திருப்பார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு, ஆன்டிபயாடிக்கில் சிவப்பு நிறத்தில் ஒரு கோடு இருக்க வேண்டும் என்கிற நடைமுறையைக் கொண்டு வந்தார்கள். அதுபோல சிவப்பு நிறத்தில் ஒரு கோடு இருந்தால், மக்களுக்கு இது ஆன்டிபயாடிக், உட்கொள்ளக் கூடாது என்கிற புரிதல் இருக்கும். இதைத் தெரியப்படுத்த மத்திய அரசு இந்த நடைமுறையைக் கொண்டு வந்தார்கள்.

பாராசிடமால் மாத்திரைகளை சாதாரண காய்ச்சலுக்கு நாம் போட்டுக்கொள்ளலாம். இதையும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தக் கூடாது. அனைத்து மருந்துகளிலும் பக்கவிளைவுகள் உள்ளன. சிறுநீரகம் பாதிக்கப்படும். தினசரி 10 பாராசிடமால் மாத்திரைகளை உட்கொண்டால் நிச்சயமாக பக்கவிளைவுகள் ஏற்படும்.

காய்ச்சல், இருமல், உடல்வலி, தலைவலி இருந்தால் பாராசிடமால் போட்டுக்கொள்ளலாம். ஆன்டிபயாடிகைப் பொறுத்தவரை கேட்டு தெரிந்துகொண்டு உட்கொண்டால் நல்லது.

ஆன்டிபயாடிக் மாத்திரை அட்டைகளில் இந்த சிவப்பு நிறக் கோடு நடைமுறை உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். இல்லையெனில், இந்த நடைமுறையை தற்போது கொண்டு வரலாம். மாநிலங்கள் மூலம் கூட இந்த நடைமுறையை நாம் கொண்டு வரலாம்" என்றார் சௌமியா சுவாமிநாதன்.

கடந்த திங்கள்கிழமை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, சௌமியா சுவாமிநாதன் இவ்வாறு விளக்கினார்.