ANI
தமிழ்நாடு

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு!

ராம் அப்பண்ணசாமி

`நெல்லை மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலையைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித்தராமல், அவர்களை அங்கிருந்து வெளியேற்றக்கூடாது’ என உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 99 வருடங்கள் குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை ஒப்பந்தம் 2028 பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. ஆனால் குத்தகை எடுத்தத் தனியார் நிறுவனம் தொழிலாளர்களை தேயிலைத் தோட்டத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதைத் தொடர்ந்து, தங்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம், இழப்பீடு போன்றவை வாழ்க்கையை நடத்தப் போதுமானதாக இல்லாததால் மறு வாழ்வு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டி அரசு அதிகாரிகளிடம் மாஞ்சோலைத் தொழிலாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் மனு மீது எந்த மேல் நடவடிக்கையும் இல்லாததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த அமுதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடுத்தார்.

`மாஞ்சோலையில் தற்போது இருக்கும் 700 தொழிலாளர்கள் குடும்பத்துக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி அவற்றில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் தமிழக அரசு வீடு கட்டித் தர வேண்டும். மறு பணி வாய்ப்பு வழங்கும் வரை மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார் அமுதா

`இலங்கைத் தமிழர்கள் பலருக்கு மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் ரப்பர் தோட்டங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டான் டீ, மறுவாழ்வு ஏற்படுத்தித் தரத் தொடங்கப்பட்டதுதான். எனவே இந்த விவகாரத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மறுவாழ்வுக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மூத்த வழக்கறிஞர் லஜபதி ராய் வாதாடினார்.

அரசு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, `இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்றுத் தங்களிடம் தெரிவிக்க வேண்டும். அதுவரை தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றக்கூடாது’ என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.