ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட மாதிரி படம். 
தமிழ்நாடு

திட்டக்குடி விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: பேருந்து ஓட்டுநர் கைது! | SETC Bus Accident |

விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கிழக்கு நியூஸ்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நிகழ்ந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து ஒன்று டிசம்பர் 24 அன்று திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது திட்டக்குடி அருகே எழுதூர் என்ற இடத்தில் பேருந்தின் முன்பக்க சக்கரம் ஒன்று வெடித்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலைத் தடுப்பைக் கடந்து எதிர்திசை நோக்கிச் சென்றது. அப்போது எதிர்திசையில் வந்த இரு கார்கள் மீது பேருந்து மோதியிருக்கிறது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்த அனைவரும் காரில் பயணித்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தகவலறிந்து ராமநத்தம் காவல் துறையினர் உடனடியாக விபத்து நடந்த இடத்துக்குச் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் தாஹா அலி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து இது வழங்கப்படவுள்ளது.

Accident | Bus Accident | SETC Bus Accident |