தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை என்று விமர்சித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை டெபாஸிட் இழக்கச் செய்வோம் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சூளுரைத்துள்ளார்.
புதுச்சேரியில் நேற்று (டிச. 9) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு கைவிட்டுவிட்டது என்றும் எந்த வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டுவர வில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக சென்னை திருவான்மியூரியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “அரசியலில் விஜய்க்கு ஏதாவது தெரியுமா? மத்திய அரசு என்னென்ன திட்டங்கள் கொடுக்கிறது என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது. ஒரு கவுன்சிலர் கூட அவரது கட்சியில் இல்லை. நேரடியாக முதலமைச்சர் இருக்கையில் சென்று அமர வேண்டும் என்று அவர் நினைப்பது முடியுமா?” என்று பேசினார்.
இந்நிலையில், நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு தவெகவில் அண்மையில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எதிர்வினை ஆற்றியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் கூறியதாவது:-
“மற்ற இயக்கத்தைப் புண்படும் வகையில் பேசுவது நாகரிகமாக இருக்காது. ஆனால் தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட வர முடியாது என்று பேசியிருக்கிறார். அவர் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாரோ அங்கு அவரை டெபாஸிட் இழக்கச் செய்வதுதான் நமக்கான வேலை என்று தவெகவினரிடம் நான் சொல்லியிருக்கிறேன். யார் நமது காலை மிதிக்கிறார்களோ, யார் நம்மை தவறாக பேசுகிறார்களோ அவர்களுக்கு இளைஞர்கள் பாடம் புகட்ட வேண்டும். திருநெல்வேலியை விட்டு வேறு தொகுதியை நயினார் நாகேந்திரன் தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால், நமது தலைவர் எழுச்சி நாயகன் விஜய் எங்கு வேண்டுமானாலும் நிற்பார். 234 தொகுதியிலும் அவர்தான் சட்டப்பேரவை உறுப்பினர்.” என்றார்.
Former Minister Sengottaiyan has vowed to make BJP state president Nainar Nagenthran lose his deposit.