இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அக்கட்சியின் அதிகாரப்பூர்வமாக சின்னமாக இரட்டை இலை இருந்து வருகிறது. அவரது மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் ஜெயலலிதா, ஜானகி ஆகியோர் இடையிலான போட்டியால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு கிடைத்தது. பின்னர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்பட்டது. அப்போது, அமமுக தலைவர் டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தது பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு இரட்டை இலை கிடைத்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், இரட்டை இலைச் சின்னத்தைத் தனக்கு ஒதுக்கக் கோரி எனக்கே என போர்க்கொடி தூக்கி, வழக்கு தொடர்ந்தார். ஆனால், அதிமுகவில் பெரும்பான்மை ஆதரவு எடப்பாடி இருப்பதால், தற்போது இரட்டை இலை சின்னம் எடப்பாடி தலைமையிலான அதிமுகவிடமே உள்ளது.
இந்நிலையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது:-
“தேர்தல் ஆணையம் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாக கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையான அதிமுக இல்லை. அதிமுக கட்சியின் உண்மையான நிலை என்ன என்பதை நிருபிக்க அவகாசம் தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
Former Minister Sengottaiyan has urged the Election Commission to intervene and investigate the ADMK symbol issue.