கரூரில் காங்கிரஸ் நிர்வாகியை திமுகவில் இணைத்து எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையான நிலையில், இதை முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு சென்றதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்டச் செயலாளருமான செந்தில்பாலாஜி அண்மையில் ஒரு பதிவைப் பதிவிட்டிருந்தார். அதில், "தமிழ்நாடு தலைநிமிர, முதல்வர் மு.க. ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் எஸ். கவிதா, தன்னைக் கட்சியில் இணைத்துக் கொண்டார்" என்று குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது. இந்தப் பதிவு செந்தில்பாலாஜியின் எக்ஸ் தளப் பக்கத்திலிருந்து பிறகு நீக்கப்பட்டது.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இச்சம்பவத்தைக் கண்டித்திருந்தார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஜோதிமணி குறிப்பிடுகையில், "கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும்" என்றார்.
மேலும், "திமுகவின் மாவட்டச் செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.
கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில், பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு, நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய, காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இம்மாதிரியான அவமரியாதயை எளிதில் கடந்து போய்விட முடியாது.
கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.
தமிழ்நாட்டின் மொழி, இனம், பண்பாடு , எதிர்காலம் அனைத்திற்கும் பாசிச சக்திகளால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிற இன்றைய அரசியல் சூழலில் நம் அனைவருக்கும், தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்திச் செயல்பட வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுவே தமிழ்நாட்டிற்கு நன்மை செய்யும்" என்று ஜோதிமணி பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜோதிமணி குறிப்பிட்டிருந்ததைப் போல இந்த விவகாரத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனத்துக்கு செல்வப்பெருந்தகை கொண்டு சென்றுள்ளார்.
இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை பேசியதாவது:
"என்னிடம் நேற்று தான் அந்தத் தகவலைச் சொன்னார்கள். அதுமாதிரி செய்யக் கூடாது. கூட்டணியில் இருக்கும்போது, ஒரு கட்சியில் உள்ள பொறுப்பாளரை நியமித்ததாக எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். நானும் இதை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். அதன்பிறகு, அந்தப் பதிவு நீக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட அசௌகரியங்களைத் தவிர்க்க வேண்டும். இப்படி செய்வதால் முதல்வருக்கு தான் நெருக்கடி கொடுக்கிறார்கள். இதை இனி தவிர்க்க வேண்டும்.
எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பெருந்தன்மையானவர். பெருந்தன்மையுடன் தான் இதை அவர் அணுகியிருக்கிறார். கூட்டணி தர்மம் என்பது வேறு. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதற்கு உரிய மதிப்பு மரியாதையையும் அளிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரிய மாண்பைப் பாதுகாக்க வேண்டியது எல்லோருடைய பொறுப்பாகும்" என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
Senthilbalaji | Jothimani | Selvaperunthagai |