தமிழ்நாடு

செம்பரம்பாக்கத்திலிருந்து நீர் திறப்பு: அதிகாரிகளைக் கண்டித்த செல்வப்பெருந்தகை | Selvaperunthagai |

மக்கள் பிரதிநிதியிடம் தெரிவிக்காமல் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்தது ஏன் என்று கேள்வி....

கிழக்கு நியூஸ்

செம்பம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டதை மக்கள் பிரதிநிதியான என்னிடம் தெரிவிக்காதது ஏன் என்று ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை அதிகாரிகளைக் கடிந்து கொண்டார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மறுபுறம் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில் 20.84 அடி நிரம்பியுள்ளது. மேலும் இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கத்திற்கு வரும் நீரின் அளவும் 2,170 அடியாக உயர்ந்தது.

இதனால் செம்பரம்பாக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை 500 கனஅடியாக உயர்த்தி அதிகாரிகள் திறந்துவிட்டனர். இதன் காரணமாக அடையாறு, கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளிடம் கண்டிப்புடன் பேசினார். அவர் கூறியதாவது:-

“ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது குறித்து மக்கள் பிரதிநிதிகளான சேர்மனுக்குத் தெரிவிக்கப்படவில்லை. அமைச்சருக்கும் தெரியவில்லை. சட்டமன்ற உறுப்பினரான எனக்கும் தெரிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தெரிவிக்கவில்லை. ஏன் சொல்லாமல் கொள்ளாமல் திறந்தீர்கள்? நான் 3 ஆண்டுகள் திறந்து விட்டிருக்கிறேன். சென்ற ஆண்டும் சொல்லாமல் திறந்துவிட்டீர்கள். திறந்தது தவறில்லை. நீங்களே தீறந்துவிடுங்கள். நீங்களே மக்கள் பிரதிநிதியாக மாறுங்கள். இப்போது நான் தானே ஊர் ஊராகப் போகப்போகிறேன். 500 கனஅடி திறந்திருக்கிறார்கள், கவனமாக இருங்கள் என்று நான் எல்லா ஊர்களுக்கும் சென்று சொல்லப் போகிறேன். எங்களிடம் தெரிவிக்க வேண்டும் அல்லவா! இது தவறல்லவா! நீங்களே மக்கள் பிரதிநிதியாக ஆகிவிட்டால் பிறகு எதற்கு அரசாங்கம்? அதிகார்களே அரசை நடத்திக் கொள்ளலாமே” என்று கடிந்து கொண்டார்.