ANI
தமிழ்நாடு

காங்கிரஸ் - திமுக இடையே எந்த விரிசலும் இல்லை: செல்வப்பெருந்தகை | Selvaperunthagai |

காங்கிரஸ் எம்.பி.க்களை முதல்வர் தாயுள்ளத்துடன் சந்தித்து உரையாற்றினார் என்றும் பேச்சு...

கிழக்கு நியூஸ்

காங்கிரஸ் - திமுக இடையே எந்த விரிசலும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் எம்பிக்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியதாவது:-

”நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள சிறு பிரச்னைகள் பற்றி ஆலோசனை மேற்கொண்டோம். அதை உடனடியாகத் துரிதமாக நடத்திக் கொடுப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார். சில பகுதிகளில் அலுவலகங்கள் பெறுவதில் பிரச்னை இருந்தது. அவற்றையும் உடனடியாக கொடுப்பதாக முதல்வர் கூறினார். எந்தெந்த தொகுதிகள் காங்கிரஸுக்கு வேண்டும் என்று எங்கள் எம்.பிக்கள் கேட்டுக் கொண்டார்கள்.

கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், விமான நிலையம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். திருநெல்வேலி எம்.பி. ராபர்ட் க்ரூஸ் தாமிரபரணிக்குத் திட்டம் ஒன்றைக் கேட்டுள்ளார். ஓசூர் விமான நிலையம் பற்றி பேசினார்கள். கும்பகோணத்தில் மகாமகத்தை அனைவரும் ஒன்றிணைந்து நடத்த வேண்டும் என்று மயிலாடுதுறை எம்.பி. பேசியுள்ளார். கரூர் மாவட்ட வளர்ச்சிகளைப் பற்றி எம்.பி. ஜோதிமணி பேசியுள்ளார். கடலூரில் முந்திரிக்கு ஜிஎஸ்டி வரியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று எம்.பி. கேட்டுள்ளார்.

முதலமைச்சர் அனைத்தையும் கனிவுடன் கேட்டார். காபியும் தயிர் வடையும் கொடுத்தார். அனைவரையும் நலம் விசாரித்தார். தாயுள்ளத்துடன் காங்கிரஸ் எம்.பிக்களைச் சந்தித்து உரையாடினார். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் எதுவும் இல்லை. அனைவரும் மகிழ்ச்சியுடன் வந்திருக்கிறோம். காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ள தொகுதிகளில் திமுகவினரின் ஒத்துழைப்பு நன்றாகவே இருக்கிறது. 2026 தேர்தலில் திமுகவும் காங்கிரஸும் எப்படி இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, முதல்வரிடம் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கேமராக்குள் தான் விரிசல் இருக்கிறது, திமுக - காங்கிரஸ் இடையே விரிசல் கிடையாது.” என்று பேசினார்.

அதன்பின் பேசிய கரூர் எம்.பி ஜோதிமணி, “காங்கிரஸ் திமுக இடையிலான விவகாரம் குறித்து போதுமானவற்றைச் சொல்லிவிட்டோம். கரூர் விமான நிலையம், இஎஸ்ஐ மருத்துவமனை, வெண்ணெய்மலை கோயில் விவகாரம் போன்ற மக்கள் பிரச்னைகள் இருக்கின்றன. இதையெல்லாம் முதல்வரிடம் சொல்லியுள்ளோம். அனைத்து எம்.பிக்களும் அவரவர்கள் தொகுதியில் முடிக்க வேண்டிய வேலைகளின் பட்டியலை முதல்வரிடம் கொடுத்துள்ளோம். தேர்தல் களத்தில் கூட்டணி எப்படித் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்பதையும் கூறியுள்ளோம். முதல்வரை காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்திப்பது முதன்முறை அல்ல” என்று கூறினார்.