செல்வப்பெருந்தகை (கோப்புப்படம்) படம்: https://twitter.com/SPK_TNCC
தமிழ்நாடு

ஆட்சி அதிகாரக் கோரிக்கையில் மேலிடம் நல்ல முடிவை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை | Selvaperunthagai |

அண்ணாமலை பேசும் பேச்சுக்கு அவர் எங்கேயும் கால் வைக்க முடியாது. தமிழ்நாட்டில் அவரை மன்னித்து விட்டு வைத்திருக்கிறோம்...

கிழக்கு நியூஸ்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரிய விவகாரத்தில் கூட்டணியின் மேலிடம்தான் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளன. இதில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் திமுக பங்கு தர வேண்டும் என்ற குரல் காங்கிரஸ் கட்சிக்குள் வலுத்து வருகிறது. இதற்கிடையில், திண்டுக்கல்லில் நேற்று (ஜன.11) கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பொங்கல் விழாவில் பங்கேற்றார். அப்போது அவரிடம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இல்லை

அதற்குப் பதிலளித்த அமைச்சர் கூறியதாவது: “ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பது அவர்கள் உரிமை. ஆனால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது. தனிப்பட்ட கட்சியின் ஆட்சிதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கூட்டணி ஆட்சியாக இருக்காது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்” என்றார்.

செல்வப்பெருந்தகை பதில்

இந்நிலையில் இன்று இது தொடர்பான கேள்விக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலளித்தார். சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “எல்லோருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. அமைச்சர் தனது கருத்தைக் கூறிவிட்டார். நாங்கள் எங்கள் கருத்துகளைக் கூறுகிறோம். ஆனால் முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணியின் தலைவராக இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினும், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கேவும் ராகுல் காந்தியும்தான். அவர்கள் நல்ல முடிவெடுப்பார்கள்.

விஜயுடன் அரசியல் ஒப்பந்தத்திற்கு முயல்கிறது பாஜக

தில்லியில் சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜராகியிருப்பது, சிங்கம் வாயில் தானாக மாட்டிக்கொண்ட கதை போல் இருக்கிறது. கரூர் சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு நியாயமாக விசாரித்துக் கொண்டிருந்தபோதே, சிபிஐ விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்திய பாஜக, இன்று தவெக தலைவரையும் தில்லிக்கு அழைத்திருக்கிறது. இது அவருடன் அரசியல் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான முயற்சி. ஆனால் அது வெற்றிபெறாது.

அண்ணாமலையை விட்டு வைத்திருக்கிறோம்

அண்ணாமலை பேசும் பேச்சுக்கு, அவர் எங்கேயும் கால் வைக்க முடியாது. தமிழ்நாட்டில் அவரை மன்னித்து விட்டு வைத்திருக்கிறோம். மகாராஷ்டிராவில் சிவசேனாவும் அதேபோல் மன்னிக்கலாம். ஆனால் அவர்கள் மன்னிக்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சி தமிழ் மக்களுக்குச் செய்த துரோகத்தை பராசக்தி படம் காட்டுகிறது என்று அண்ணாமலை பேசியிருக்கிறார். முதலில் அவரது கட்சிக்கு அவரை விசுவாசமாக இருக்கச் சொல்லுங்கள். இந்தி திணிப்பு போராட்டம் என்பது கடந்த கால வரலாறு. அதுபோல் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வரலாறு இருக்கிறது” என்றார்.

Tamil Nadu Congress Committee President Selvaperundhagai has said that the alliance's top brass should take the right decision on the issue of seeking a share in the ruling party.