நடிகர்களுக்குக் கூடும் கூட்டம் வாக்காக மாறாது. சிவாஜிக்கும் சிரஞ்சீவிக்கும் டி.ஆருக்கும் வராத கூட்டமா என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து மதுரையில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்தார். அவர் பேசியபோது -
“கடந்த காலங்களிலும் சரி, இப்போதும் சரி, திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வரும் பல்வேறு நபர்களையும், நடிகர்களையும் விமர்சனம் செய்யும் பழக்கம் இருக்கிறது. கடந்த காலங்களில் நடிகர்களுக்குக் கூடும் கூட்டம் அனைத்தும் வாக்காக மாறாது என்று எதிர்க்கட்சிகள் கூறுவது வழக்கம். எந்தக் கூட்டமும் வாக்காக மாறாது என்பது எல்லாத் தலைவர்களுக்கும் பொருந்தும். நடிகர் விஜய்க்கும் இது பொருந்தும்.
கூட்டத்தை வைத்து அளவுகோல் வைக்க முடியாது. யாரும் எந்தக் கூட்டத்தையும் வாக்காக எதிர்பார்க்கக் கூடாது. நடிகராக இருந்தாலே கூட்டம் கூடத்தான் செய்யும். விஜய் ஒரு நடிகர், கதாநாயகனாக முன்பே கதாபாத்திரங்களில் நடித்தவர். அவருக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறது.சிவாஜிக்குக் கூடாத கூட்டமா? பாக்யராஜ், டி.ராஜேந்தருக்கு கூடாத கூட்டமா? அடுக்கு மொழியில் பேசக்கூடிய எத்தனை பேரைப் பார்த்திருப்பார்கள் மக்கள். எனவே, கூட்டத்தை வைத்தெல்லாம் மதிப்பிடக்கூடாது. நடிகர் என்றாலே கூட்டம் கூடத்தான் செய்யும்.
அந்த ரசிகர் கூட்டத்தைக் குறை சொல்லாமல், பக்குவப்படுத்தி, அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும். உதாரணமாக, சிவாஜி கணேசனை நம்பி வந்தவர்கள் கடைசியில் எங்கே போனார்கள்? காங்கிரஸ் கட்சி, பிறகு வேறு கட்சிகளில் மாறி, பதில் இல்லாமல் போனார்கள். ஒவ்வொரு கட்சியிலும் இப்படித்தான் நிர்வாகிகள் இருந்தார்கள். பாக்கியராஜ் உள்ளிட்டவர்களும் இதே நிலையில் இருந்தார்கள். ஆகவே, கூட்டத்தை வைத்து யாரையும் ஏமாற்றக் கூடாது. விஜய்யை மட்டும் குறை சொல்லி இதைப் பேச முடியாது. ராமர் பாலத்தை கட்டுவதற்கு அணில் உதவியது போல் அதிமுக ஆட்சி அமைய நீங்களும் உதவ வேண்டும். நீங்கள் வேறு ஏதோ அணிலை நினைத்து விடாதீர்கள்”
இவ்வாறு தெரிவித்தார்.