கோப்புப்படம் 
தமிழ்நாடு

ராகுல் காந்திக்குப் புகழாரம்: பதிவை நீக்கிய செல்லூர் ராஜூ!

கிழக்கு நியூஸ்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைப் புகழ்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த பதிவை, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நீக்கியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்த அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்டது. ஒருவேளை தொங்கு சட்டப்பேரவை அமைந்தால், அதிமுகவின் ஆதரவு யாருக்கானதாக இருக்கும் என்ற கேள்விகள் வைக்கப்பட்டன. அதற்கான முடிவு அப்போது தெரிவிக்கப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ல் வெளியாகவுள்ள நிலையில், ராகுல் காந்தியைப் புகழ்ந்து அதிமுகவின் முக்கியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் பதிவிட்டிருந்தார்.

ராகுல் காந்தி மக்களுடன் மிக எளிமையாகக் கலந்துரையாடும் காணொளி ஒன்றைப் பகிர்ந்து, "நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி" என்று செல்லூர் ராஜூ குறிப்பிட்டிருந்தார். செல்லூர் ராஜூவின் இந்தப் பதிவு தமிழ்நாட்டு அரசியலில் பேசுபொருளானது. காங்கிரஸ் கட்சிக்கு மாறுகிறாரா செல்லூர் ராஜூ என்ற பேச்சுகளெல்லாம் எழுந்தன.

இந்த நிலையில், 24 மணி நேரத்தில் ராகுல் காந்தி குறித்த பதிவை செல்லூர் ராஜூ தனது பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார். கட்சி மேலிடத்திலிருந்து இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதா, கட்சியின் உத்தரவின் பெயரில் பதிவை நீக்கினாரா என்பது குறித்து உறுதிபட எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.