தமிழ்நாடு

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த சீமான் முயற்சி: கீதா ஜீவன்

ராம் அப்பண்ணசாமி

ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் சட்ட ஒழுங்குப் பிரச்சனையை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே சீமான் பேசி வருகிறார் என்று அவருக்குத் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் தமிழக அமைச்சர் கீதா ஜீவன். செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கீதா ஜீவன் அளித்த பேட்டியின் சுருக்கம் பின்வருமாறு:

`எந்த வார்த்தையைக் கூறி பேசினாலும், கலைஞரைப் பற்றி பேசியிருந்தாலும், நிறைய தருணங்களை நாம் பார்த்தோமேயானால், இன்றைக்கு ஒன்று பேசுகிறார், அடுத்த முறை வேறொன்றைப் பேசுகிறார். இதனால் அவரது மனநிலையை அவர் சோதிப்பது நல்லது.

பேசினாலே கைது செய்வீர்களா, இது கருத்துரிமைதானே சவுக்கு சங்கரை ஏன் கைது செய்தீர்கள், ஃபெலிக்ஸை ஏன் கைது செய்தீர்கள் என்கிறார்கள். (அவர்) பெண் காவலர்களையும், உயரதிகாரிகளையும் தவறாக சித்தரித்துப் பேசுகிறார். அதற்கு பெண் காவலர்கள் புகார் அளித்துள்ளனர், அதனால்தான் கைது நடந்துள்ளது. அதை அவர் நியாயப்படுத்துகிறாரா? பெண் காவலர்களைத் தவறாகப் பேசியதை அவர் ஏற்றுக்கொள்கிறாரா?

கட்சி வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் உண்டு, ஆனால் இது மாதிரி தனிப்பட்ட முறையில் தவறான சொற்களை உபயோகப்படுத்துவது, உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கூறுவது, வேண்டுமென்றே பிரச்சனை உண்டாகட்டும், சட்ட ஒழுங்கு பிரச்சனை உருவாகட்டும் என்று பேசுவது ஏற்கத்தக்கதல்ல. நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயங்களை அடுக்கு மொழியில் பேசி தமிழ் சமூகத்தைத் தவறாக வழிநடத்துகிறார்.

அவர் கட்சிக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இலங்கைத் தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி அவர் கட்சிக்கு நன்கொடையை பெற்று வருகிறார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நாக்கை அடக்கிப் பேச வேண்டும். அரசியல் அரைவேக்காட்டுத்தனமாக பேசக்கூடாது’.