படம்: x.com/EPSTamilNadu
தமிழ்நாடு

அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முழு ஆதரவு: சீமான்

"அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் அவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது."

கிழக்கு நியூஸ்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதிக்காததைக் கண்டித்து அதிமுக மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நாம் தமிழர் முழு ஆதரவைத் தருவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்து சட்டப்பேரவையில் அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை கோரியும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக எம்எல்ஏ-க்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்களுடையப் போராட்டத்துக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் ஆகியோர் ராஜரத்தினம் மைதானத்துக்குச் சென்று ஆதரவு தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியும் அதிமுகவின் போராட்டத்துக்கு முழு ஆதரவைத் தருவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் சீமான் பதிவிட்டுள்ளதாவது:

"கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்க்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும்.

இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.