திமுக தான் பாஜகவின் ஏ டீம். ஆர்.எஸ்.எஸுக்கும் திமுகவுக்கும் கொள்கையில் பெரிய வித்தியாசம் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
”நான் தேர்தல் அரசியலுக்கு வரும்போது, இஸ்லாமியர், கிறிஸ்தவர்களின் வாக்குகள் இவனுக்குப் போய்விடும் என்று, பாஜக, ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு பரப்பினார்கள். நான் பாஜகவின் பிடீம், ஆர்எஸ்எஸ் கைக்கூலி என்றார்கள். சீமானுக்கு வாக்களித்தால் பாஜக வந்துவிடும் என்றார்கள். சீமானுக்கு வாக்களித்தால் சீமான் தானே வருவான்.
மொத்தமாக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் வாக்குகளை திமுக ஏமாற்றி அறுவடை செய்திருக்கிறது. நான் பாஜகவின் பி-டீமென்றால், ஏ-டீம் ஒன்று இருக்கிறது. அது யார்? திமுகதான். ஆர்எஸ்எஸ் கைக்கூலி திமுகதான். இரண்டுக்கும் பெரிய கொள்கை வேறுபாடு எதுவும் இல்லை.
நான் வந்தால் பாஜக வந்துவிடும் என்றால், எப்படி? நான்தான் வருவேன். இந்தத் தேர்தலில் பாஜக இல்லை. பாஜக வேறொரு கட்சியின் பின்னால் நிற்கிறது. எல்லாருக்கும் வாய்ப்பு கொடுத்துவிட்டீர்களே. ஸ்டாலின் ஆட்சியிலும் வாழ்ந்துவிட்டீர்கள், எடப்பாடி ஆட்சியிலும் வாழ்ந்துவிட்டீர்கள். இந்த இரு கட்சிகளுக்கும் 60 ஆண்டுகள் மாறி மாறி வாய்ப்பு கொடுத்துவிட்டீர்கள். ஒரு ஐந்து ஆண்டுகள் உங்கள் மகனுக்கு கொடுத்துப் பாருங்கள் என்று கேட்டோம்.
நீங்கள் பெரிய வீட்டைக் கட்டி வைத்து செல்ல விரும்புகிறீர்கள், நான் நல்ல நாட்டை வைத்துச் செல்ல விரும்புகிறேன். நீங்கள் தங்கத்தை வைக்க விரும்புகிறீர்கள், நான் தண்ணீரை வைக்க விரும்புகிறேன். நீங்கள் பணம், கார் வைக்க விரும்புகிறீர்கள், நான் நல்ல காற்றை வைத்துச் செல்ல விரும்புகிறேன். நீங்கள் சொத்து சேர்த்து வைத்துச் செல்ல விரும்புகிறீர்கள், நான் நஞ்சில்லாத உணவை வைத்துச் செல்ல விரும்புகிறேன்.
விஜய் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு அஞ்சுகிறது. எங்கள் அண்ணன் சொன்னால், அதில் உண்மை இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில், அவர் அந்தக் கூட்டணியில் இருக்கிறார். அவருக்கு ஆட்சி அமைய பங்கு உள்ளது. அவரது வாக்கு வலிமையும் உள்ளது. அவர் சொன்னால் உண்மை இருக்கும்.
கரூரில் ஒரு நடிகரைப் பார்க்க வந்த கூட்டம் நெரிசலில் சிக்கி இறந்துவிட்டது. ஆனால், தூத்துக்குடி போராட்டம் எப்படி நடந்தது? ஸ்டெர்லைட் ஆலையால் வாழ்வாதாரம் கெடுகிறது. இங்கு வாழ முடியவில்லை. நுரையீரல் தொற்று, புற்று வருகிறது. இந்த ஆலையை மூடுங்கள் என்று போராடுகிறோம். மக்களே தலைமையேற்றுப் போராடினார்கள். எழுச்சி, கிளர்ச்சி, புரட்சி. ஒரு கட்சித் தலைவர் முன்னால் நின்றாரா? கொடி உயர்த்தப்பட்டதா? இல்லை. மக்கள் கையை உயர்த்தி ஆலையை வேண்டாம் என்று முழங்கினார்கள். மக்கள் முன்னெடுத்த போராட்டம். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தார்கள். அதிகாரி என்ன சொல்லியிருக்க வேண்டும்? இவ்வளவு பேர் வர முடியாது, நான்கு அல்லது ஐந்து பேர் வந்து மனு கொடுங்கள் என்று சொல்லியிருந்தால், அழகாக கோரிக்கை வைத்து சென்றிருப்பார்கள்.
ஏன் துப்பாக்கிச் சூடு நடந்தது? கலவரம் வரும் என்று எப்படிக் கணித்தீர்கள்? கலவரம் வந்தாலும், முதலில் தண்ணீர் பீய்ச்சி அடித்திருக்கலாம், தடியடி நடத்தியிருக்கலாம், கண்ணீர்ப் புகை வீசியிருக்கலாம். எடுத்ததும் சுடச் சொன்னவர் யார்? தொலைதூரத்தில் இருந்து சுடும் ஸ்னைப்பர் துப்பாக்கியால் வாகனத்தின் மீது ஏறிச் சுடச் சொன்னது யார்? இவ்வளவு ஆயுதங்களுடன் வந்து நின்றவர் யார்? காலுக்கு கீழே சுட வேண்டும், தொண்டைக் குழியில் எப்படிக் குறிவைத்து ஏன் சுட்டார்கள்? உண்மை கண்டறியும் ஆணையம் உறங்கிக் கொண்டிருந்ததா? இப்போது பார்க்கும் ஆட்சி அப்போது ஏன் வரவில்லை? காங்கிரஸ் இப்போது வருகிறதே, அப்போது ஏன் வரவில்லை? அன்று முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சொன்னார்களா? அவருக்கு தெரியவில்லை. சுடச் சொன்னவர் யார்? எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், இரண்டு மாதத்தில் விசாரித்து நீதி நிலைநாட்டுவேன் என்றார். நான்கு ஆண்டுகள் முடிந்து, அடுத்த ஆறு மாதத்தில் தேர்தல் வருகிறது. என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடந்தது. நான் தூத்துக்குடியில் மூன்று மணி நேரம் சாட்சி சொன்னேன். அறிக்கை கொடுத்தார்கள். ஆனால், என்ன நடவடிக்கை? துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் கொடுக்கப்பட்டுள்ளது.
கரூர் நிகழ்வு ஒரு ஆண்டுக்கு முன் நடந்திருந்தால், இவ்வளவு அக்கறை காட்டியிருப்பார்களா? இது ஒரு இறப்போடு இறப்புதான். கள்ளச் சாராயம் குடித்து 63 பேர் இறந்தார்கள், ஆந்திரக் காட்டில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள், இந்தியக் கடலில் 850 மீனவர்கள் இறந்தார்கள். எங்கள் இறப்பு அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. இப்போது, நான்கு மாதத்தில் தேர்தல் வருகிறது, கூட்டணி அமைக்க வேண்டும். அதனால் பரபரப்பாக இயங்க வேண்டும், பேச வேண்டும். உண்மையைக் கண்டறிவது என்ன?
கரூர் சம்பவத்தில் மாற்றி மாற்றி புகார் தெரிவித்துக் கொண்டு யார் காரணம் யார் காரணம் என்று பேசுவதைக் கேட்கும்போது கோபமும், எரிச்சலும் வருகிறது. இறந்தவர்கள் வீட்டில் இந்தச் சண்டையைப் பார்க்கும்போது, நாங்கள் பிணத்தைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறோம், நீங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்”
இவ்வாறு பேசினார்.