பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி என்றால் கொள்கை வேறு, அரசியல் வேறா? என்று விஜய் குறித்து சீமான் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது :-
“ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களுக்கு பயன் தரும் என்றால், இந்த வரியை விதித்தது யார்? ஏன் குறைத்தீர்கள்? உங்கள் வரி மக்களுக்குச் சுமையாக இருக்கிறது என்றுகூடத் தெரியாத நீங்கள் என்ன தலைமை? என்ன ஆட்சியாளர்? தன் நாட்டு குடிமக்களுக்கு இவ்வரி நன்மை பயக்குமா, தீமை பயக்குமா? எளிதாக இருக்குமா, பெரும் சுமையாக இருக்குமா, அது வளர்ச்சிக்கு உதவுமா, இல்லை வீழ்ச்சிக்கு தள்ளுமா, என்று கூட தெரியாத அதிகாரத்துக்கு எப்படி வந்தீர்கள்? இது சுமை என்றே தெரியாமல் விதித்துவிட்டுப் பின் குறைக்கிறீர்கள் என்றால் உங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள். பொது மன்னிப்பு கேளுங்கள். தெரியாமல் செய்துவிட்டோம் என்று ஒப்புக் கொள்ளுங்கள். பணம் செல்லாது என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்தீர்களே அதனால் ஏற்பட்ட நன்மை ஏதாவது ஒன்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஊழல் ஒழியும் என்றீர்கள் பிறகு எதற்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகள் வருகின்றன?
உலகமே சந்தையாகி விட்டதால் தரகர்கள் தலைவராகி விட்டார்கள். அவர்களுக்கு நீங்களும் நானும் பண்டம்தான். இந்தச் சந்தையில் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவும் சீனாவும்தான் முதலிடத்தில் இருக்கின்றன. நீங்கள் மருத்துவமனைக்கு போனால், உங்களைச் சோதனை செய்து ஒவ்வொரு உறுப்புக்கும் ஏற்ற விலை வைத்து விடுவார்கள். மூளைச் சாவு என்று சொல்கிறார்களே நீங்கள் அதை முன்னால் படித்திருக்கிறீர்களா? அவர்களுக்கு உடல் உறுப்புகள் எல்லாம் தேவைப்பட்டுவிட்டால், மூளைச்சாவு என்று சொல்லிவிடுவார்கள்.
தரகர்களைத் தலைவர் ஆக்கியதால் தான் அவர்கள் இஷ்டத்திற்கு வரி விதிக்கிறார்கள். அங்கே மத்திய அரசு வரி விதித்ததும் நம் ஊர்களில் ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டுவிட்டது. தற்சார்பு பொருளாதாரம் இல்லாமல், பிற நாட்டைச் சார்ந்து இருக்கும் வர்த்தகத்தால் வரும் பின்னடைவு இதுதான். இந்த முறை மிகவும் ஆபத்தானது.
விஜய் பேசுவதை ரசித்து சிரிக்கத்தான் வேண்டும். அவருக்குக் கருத்தைக் கருத்தால் மோதத் தெரியவில்லை. பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி என்கிறாரே விஜய், கொள்கைக்கும் அரசியலுக்கும் உள்ள வேறுபாடு என்ன? பாஜக கொள்கை எதிரி என்றால், அதன் அரசியல் செயல்பாட்டை ஏற்கிறீர்களா? திமுக அரசியல் எதிரி என்றால் அதன் கொள்கைகளை ஏற்கிறீர்களா? காங்கிரஸ் உங்கள் கொள்கை நண்பனா? அதற்கும் பாஜகவுக்கும் கொள்கை ரீதியான வேறுபாடுகள் என்ன? இரண்டு கட்சிகளின் பொருளாதாரக் கொள்கைகள் என்ன? வெளியுறவுக் கொள்கைகள் என்ன? மருத்துவக் கொள்கைகள் என்ன? காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் ஒரே கொள்கைதான். நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். கொடியில் வண்ணம் மாறும், கொள்கையில் எண்ணம் மாறாது. திமுகவுக்கும், அதிமுகவுக்கும் அதே சிக்கல்தான்.
கொள்கை வேறு, அரசியல் வேறு இல்லை. கொள்கைதான் அரசியல். கொள்கையை செயல்படுத்தும்போது அரசியல். அதேபோல், என்னுடையது மதச்சார்பற்ற சமூக நீதி என்று விஜய் சொல்கிறாரே, அப்போது சமூக நீதி மதத்தை வைத்து வந்ததா? வகுப்புவாரி பிரதிநிதித்துவம்தான் அதற்கு பெயர். சாதியை, சாதி இழிவை ஒழிக்க வேண்டும், தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் போராடினோம் என்றால், அது இருக்கிறது. தீண்டாமைக் கொடுமை இருக்கிறது, அதை ஒழிக்கப் போராடுகிறோம்.
இப்போது, மதச்சார்பற்ற சமூக நீதி என்று நீங்கள் சொல்லும்போது, மதச்சார்புள்ள சமூக நீதி என்று ஒன்று இருக்கிறதா? உங்கள் ஆட்சியில் இஸ்லாமியர், கிறிஸ்தவருக்கு இடப் பங்கீடு இருக்கிறதா? மாநாட்டில் பேசும்போது, மொழி, இனம் என்று பிரிக்கிறார்கள் என்று பேசுகிறீர்கள். அப்படியானால் அடிப்படை அரசியலே தெரியவில்லை என்று ஆகிறது. ஏனெனில், உலகம் முழுமைக்கும்,மொழியின் அடிப்படையில் தான் எல்லா தேசிய இனங்களும் அரசியலைச் செய்கிறது. இந்தி எதிர்ப்பில் தான் இங்கு கிளர்ச்சி வந்து ஆட்சியையே கைப்பற்றியது திமுக. பங்களாதேஷ், பாகிஸ்தானில் இருந்து மொழியால் தான் பிரிந்தன. அயர்லாந்துக்கு தனிநாடு கேட்டதே ஐரிஷ், இங்கிலீஷ் என்ற மொழி அடிப்படையில்தான். பிரபாகரன், காமராசர், கக்கன், சிங்காரவேலர், மறைமலை அடிகள், முத்துராமலிங்க தேவர், வ.உ.சிதம்பரனார் போன்றவர்களைக் கரைத்துக் குடித்து, நேசித்துப் படித்து அவர்கள் போட்ட பாதையில் நடக்கும் நான் இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்பேன். அதை விமர்சிக்கிறார் என்று சொல்லக்கூடாது. ”
இவ்வாறு தெரிவித்தார்.